நடப்பாண்டு தோட்டக்கலை பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கு மாணவ-மாணவிகள் இணையதளம் மூலமே விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் கீழ் செயல்பட்டுவரும், சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையம், கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி பயிற்சி மையம், திண்டுக்கல் மாவட்டத்தில் ரெட்டியார் சத்திரத்தில் உள்ள காய்கறி மகத்துவ மையம் ஆகிய நிறுவனங்களில், 2020-21 ஆண்டுக்கான ஈராண்டு தோட்டக்கலைப் பட்டயப்படிப்பில் சேர தகுதி உள்ள மாணவ-மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்படிப்பில் சேருவதற்கு, பிளஸ் -2வில், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வேளாண்மைக் கோட்பாடு செயல்முறை I மற்றும் II ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றினை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் 01-07-2020 ம் தேதியில் 21 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
ஆனால் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் அருந்ததியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை.
27-07-2020 முதல் 31-08-2020 வரை தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் இணையதளமான http://tnhorticulture.tn.gov.in-ல் விண்ணப்பத்தினை அத்தளத்திலேயே பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் ரூ.150ம், மற்ற பிரிவினர் ரூ.300ம் இணையதளத்தின் வாயிலாக செலுத்தலாம்.
மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், கடைசியாக பயின்ற நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் ஆகியவைத் தொடர்பான விபரங்களை பிழையின்றி கவனமாக இணையதள விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேல்நிலைப் பள்ளித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, மாணவர்கள் தேர்வு நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு 18004254444 என்ற தொலைபேசி எண்ணில் காலை 9 மணி முதல் மாலை வரை, எல்லா வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் diplomaadmission@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், http://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் கற்பூரக் கரைசல் - இயற்கை விவசாயிகளின் கவனத்திற்கு!
முட்டையில் இயற்கைப் பூச்சிக்கொல்லி தயாரிக்க விருப்பமா? - தயாரிப்பது எப்படி?