வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர்ப் பகுதியில், இயற்கை முறையில் மரவள்ளி, முருங்கை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் (Subsidy) வழங்கப்படும் என வெள்ளக் கோவில் வட்டார, தோட்டக்கலை துறை (Horticulture Department) தெரிவித்துள்ளது.
மானியத் திட்டங்கள்:
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டங்களின் கீழ், 2020-21 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்காக பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி முத்தூர் சுற்றுவட்டார கீழ்பவானி பாசனப் பகுதி விவசாயிகள் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் (Bore well) உள்ள நீரினைப் பயன்படுத்தி, தோட்டக்கலைப் பயர்களான மரவள்ளிக் கிழங்கு மற்றும் முருங்கை ஆகியவற்றினை இயற்கை முறையில் சாகுபடி செய்தால் தோட்டக்கலை துறை மூலம் மானியம் (Subsidy) வழங்கப்பட உள்ளது. மேலும், இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களும், புதிதாக இயற்கை விவசாயத்தை பின்பற்றுபவர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
இயற்கை வழி சான்றிதழ்:
புதிதாக இயற்கை முறையைப் பின்பற்றி சாகுபடி (Cultivation) செய்ய உள்ள விவசாயிகள், இயற்கை வழி சான்றிதழ் (Natural way certification) பெற சிறு, குறு விவசாயிகள் ரூ. 2,500 மற்றும் பெரு விவசாயிகள் ரூ. 3,200 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், அருகிலுள்ள விவசாயிகளை ஒன்றிணைத்து குழுக்களாக சேர்ந்து இயற்கை விவசாயம் செய்யலாம். ஒரு குழுவிற்கு, குறைந்தது 25 முதல் அதிகபட்சம் 500 விவசாயிகள் வரை இருக்கலாம். இதில் குழுவாக சான்றிதழ் பதிவு செய்ய, பதிவுக் கட்டணம் ரூ. 7,500 செலுத்த வேண்டும்.
ரூ. 5,000 மானியம்:
இயற்கை வழி சாகுபடியில், குழுவாக செயல்படுவதை ஊக்குவிக்கும் (Encourage) பொருட்டு, ஒவ்வொரு விவசாயிக்கும், தோட்டக்கலை துறை சார்பில் ரூ. 500 மானியம் வழங்கப்படும். இதன்படி இப்பகுதிகளில், மரவள்ளி கிழங்கு மற்றும் முருங்கை ஆகிய பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்தால், ஹெக்டேருக்கு ரூ. 5,000 மானியம் வழங்கப்படும். இயற்கை வழியில் குழுவாக இணைந்து மரவள்ளி கிழங்கு (Cassava) மற்றும் முருங்கை (Drumstick) ஆகிய பயிர்களை சாகுபடி செய்யும் போது, தனிநபர் மானியத்தோடு, குழுவுக்கான மானியமும் சேர்த்து வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு, தோட்டக்கலை துறை உதவி இயக்குநரை அணுகி தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ஓசூரில் மாறி வரும் காலநிலை! குளிர்கால நோய்கள் தாக்குவதால் ரோஜா விவசாயிகள் கவலை!
கறவை மாடுகள், வெள்ளாடு வளர்க்க பயிற்சி முகாம்! பயிற்சி தேதி உள்ளே!