கோடைக்காலம் துவங்கி விட்டாலே நமது ஞாபகத்தில் வரக்கூடிய விஷயங்களில் ஒன்று மாம்பழ சீசன். மா விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளில் முதன்மையானது மாங்காயானது பிஞ்சு மற்றும் காயாக இருக்கும் போது உதிர்வது தான். இப்பிரச்சினையினை தடுத்து மகசூலை அதிகரிக்கும் வழிமுறைகளை வேளாண் விஞ்ஞானிகளான முனைவர் தமிழ்செல்வி, சுமதி, மணிமாறன், இளமாறன், அகிலா ஆகியோர் இணைந்து கிரிஷி ஜாக்ரனுடன் கட்டுரை வடிவில் பகிர்ந்துள்ளார்கள். அவற்றின் விவரம் பின்வருமாறு-
மா மரத்தில் ஒவ்வொரு பூங்கொத்திலும் உருவாகும் இரு பால் பூக்களில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான பூக்களே கனிகளாகின்றன. மரத்திற்குப் போதிய அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, வறட்சியால் பாதிப்படையாமல், போதிய சூரிய ஒளி அனைத்துக் கிளைகளுக்கும் கிடைத்து பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இல்லாமல் இருந்தால், ஒவ்வொரு பூங்கொத்திலும் அதிக காய்கள் காய்க்கும்.
அனல் காற்று- மழையால் பாதிக்கப்படும் விளைச்சல்:
பூக்கும் சமயம் அதிக மழை பெய்தால் மகரந்தச்சேர்க்கை பாதிக்கப்படும். கருவுறாத பூக்கள் உதிர்ந்தபின், குண்டு மணியளவு காய்கள் திரளும் பொழுது, மரத்தின் வீரியத்தைப் பொறுத்து காய்களை வைத்துக் கொண்டு, மற்ற பிஞ்சுகள் உதிர்ந்து விடும். ஆனால், காய்கள் பழுத்து வரும் பொழுது மே மாதத்தில் அனல் காற்றாலும், நீர் பற்றாக்குறையாலும் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டாலும் காய்கள் உதிர்வதால் விளைச்சல் பாதிப்பு அதிகமாகும். பிஞ்சுகள் உதிர்வதைத் தடுத்து, அதிக விளைச்சல் பெற கீழ்க்கண்ட வழி முறைகளைக் கையாளலாம்.
- மரம் ஒன்றுக்கு 10 கிலோ மக்கிய குப்பை, ஒரு கிலோ தழைச்சத்து, ஒரு கிலோ மணிச்சத்து ஒன்றரை கிலோ சாம்பல்சத்து ஆகியவற்றை இரு பிரிவுகளாகப் பிரித்து, ஆண்டுக்கு இருமுறை பருவ மழை தொடங்கும் சமயம் இடவேண்டும்.
- மண் அரிப்பைத் தடுத்து மழைநீரை நிலத்திலேயே சேமித்தால் மானாவாரி பழத்தோட்டத்தில் வறட்சியைத் தவிர்க்கலாம்.
- நூறு லிட்டர் நீரில் இரண்டு கிராம் வீதம் 2,4-டி வளர்ச்சி ஊக்கியைக் கரைத்து காய்கள் குண்டுமணி அளவில் இருக்கும் பொழுது தெளிக்க வேண்டும்.
- ஒரு விழுக்காடு யூரியாக் கரைசலை (நூறு லிட்டரில் ஒரு கிலோ) மாதம் ஒரு முறை என மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தெளிக்க வேண்டும்.
- ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படின், குறிப்பிட்ட சத்திற்கான கரைசலைத் தெளிக்க வேண்டும்.
- ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் சரியாக கவாத்து செய்ய வேண்டும்.
மேற்கண்ட வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் மாவில் பிஞ்சு உதிர்வதைத் தடுத்து அதிக விளைச்சலைப் பெற முடியும் என வேளாண் விஞ்ஞானிகள் தரப்பில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
Read more:
இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்?
கவனத்தை ஈர்த்த ஃபுகோகா- வீட்டுத் தோட்டத்தில் அசத்தும் கல்லூரி பேராசிரியர்