பசுமை போர்வையை விரிக்கும் மரங்கள் சூழ் சாலையில் பயணிக்கும் போது, 'ஆஹா... என்ன ஒரு ரம்மியம்' என, உள்மனம் வெளிப்படையாகவே சொல்லும். அறிவியல் யுகத்தில், தொழில்நுட்ப பின்னலில் வாழ்ந்தாலும், பசுமையை விரும்பாதவர் இருக்க முடியாது. இயற்கை ஈன்ற வனச்சூழலில், யாரோ நட்டு வைத்த மரங்களின் நிழலில் இளைப்பாறுவதே அலாதி சுகம் என்ற நிலையில், நம் கையால் நட்டு வைத்த மரம் தரும் நிழலை அனுபவிப்பதில், ஒருவித கர்வம் இருக்கத்தான் செய்யும்.
தன் வீட்டுத்தோட்டத்தில் பொழுதுபோக்காய் வளர்க்கும் மரக்கன்றை, போகிற போக்கில் சாலையோரம் நட்டுவைத்து, பசுமைக்கு சிவப்பு கம்பளம் விரிப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ளார், அவிநாசி அருகே, நடுவச்சேரி வலையபாளையம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி கார்த்திக், வயது 32.
வீட்டுத் தோட்டம் (Home Garden)
'அரிய வகை விதையை தேடிப்பிடித்து, அதை கன்றாக்கி, மரமாக்கி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆவல், எனது, 24 வயதில் இருந்தே வந்தது. அழிந்து வரும் நிலையில் உள்ள மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் நபர்களை தேடிப்பிடித்து, அவர்களிடம் இருந்து விதைகளை வாங்கி, வீட்டுத் தோட்டத்தில் வளர்த்து வருகிறேன். அவை ஓரளவு வளர்ந்ததும், எனது டூவீலரிலேயே கொண்டு சென்று, சாலையோரம் நட்டு விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
அப்படி நட்டு வைத்த மரங்கள் இன்று தழைத்து வளர்ந்து நிழல் தருவதை பார்க்கும் போது, பெருமையாக இருக்கிறது. பெரியளவில் இல்லாவிட்டாலும், சிறிதளவில் பசுமையை போற்றி வருகிறேன்,” என்றார் கார்த்திக். இவரது ஆர்வத்தை அறிந்த நடுவச்சேரி ஊராட்சி நிர்வாகம், புதிதாக உருவாக்கியுள்ள நாற்றுப்பண்ணையில், அரிய வகை விதைகளை சேகரித்து, அதை மரக்கன்றாக்கும் பணியில், கார்த்திக்கை இணைத்துக் கொண்டுள்ளது.
வில்வம், விலா, சிவகுண்டலம், கொடுக்காப்புளி, முள் சீதா, ராம் சீதா, புன்னை, ஆனைக்குன்றிமணி, மகிழம், தான்றிக்காய், வேங்கை என, பல அரிய வகை மர விதைகளை தேடி பிடித்து, அவற்றை நர்சரியில் நட்டு வளர்க்க, உதவி செய்து வருகிறார் கார்த்திக். இதில், அழியும் நிலையில் உள்ள, சில விதைகளும் இடம் பிடித்துள்ளன என்பதுதான் 'ஹைலைட்.'
சர்வதேச சுற்றுச்சூழல் தினமான இன்று, சூழல் காப்பதில், ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்.
மேலும் படிக்க
உலகின் மிக நீளமான தாவரம்: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!
மண்வளம் காக்க தென்னை நாரில் கிப்ட் பேக்: மாற்றத்துக்கான வழி!