ஊர்ப்பக்கம் "பெத்த பிள்ளை கைவிட்டாலும், தென்னம்பிள்ளை கைவிடாது" என்று கூறுவார்கள். அதிலும் குறிப்பாக ஆயிரம் காச்சி தென்னம்பிள்ளை உங்களை கொஞ்சங்கூட கைவிடாது.
குட்டை ரக ஆயிரம் காச்சி தென்னை மரம்
பொதுவாக தென்னை மரங்கள் உயரமாக வளரும். ஆனால் இவ்வகை ஆயிரம் காச்சி தென்னை மரங்கள் குழந்தைகள் கூட எட்டிப் பறிக்கும் தூரத்தில் வளரும். இவை ஹைப்ரிட் ரகம். அதனால் தான் இவை சீக்கிரம் பயன் அளிக்கும். இவ்வகை குட்டை மரங்கள் நம் தமிழ் நாட்டிற்கு வந்து 5 முதல் 6 வருடங்கள் ஆகிறது.
இவற்றை கிராமங்களில் மட்டும் அல்ல சிட்டியிலும் வளர்க்கலாம். காரணம் இவை குட்டை ரக மரமாக இருப்பது தான். இந்த அவசர கால யுகத்திற்கு ஏற்ற மரம் என்று கூறினால், அது கண்டிப்பாக ஆயிரம் காச்சி தென்னை மரம் தான்.
பலன் நிச்சயம்
இது குறித்து விவசாய படிப்பு பயின்றுள்ள சிவகங்கை மாவட்டம் ஆத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்த எஸ். எல். சி.திருப்பதி பேசுகையில், "இந்த ஆயிரம் காச்சி தென்னை மரக்கன்றுகள் நட்ட மூன்றரை வருடங்களில் சுமார் 3000 தேங்காய்களை தரும். இவற்றை நடும் போது ஒரு கன்றுக்கும் மற்றொரு கன்றுக்கும இடையே சுமார் 10 முதல் 15 அடி வரை இடைவெளி விட வேண்டும்.
நன்கு ஆழ குழி தோண்டி அதாவது வழக்கமாக தென்னை மரக்கன்று நடுவது போல குழி தோண்டி, கன்றை வைத்து, முறையாக பராமரித்தால் பலன் நிச்சயம். இவை வைத்த மூன்றரை ஆண்டுகளில் பலன் தந்த பிறகு, மீண்டும் புதிய கன்றுகளை நடவேண்டும். பழைய மரங்களுக்கு அருகிலேயே புதிய கன்றுகளை மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நட்டு வைத்தால் அடுத்த சாகுபடிக்கு தயாராகி விடலாம். இவற்றின் உயரம் குறைவு என்பதால், விவசாய நண்பர்களுக்கு கூலி ஆள் செலவும் மிச்சம். "என்றார்.
பயனாளியின் பதில்
வடக்கூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. கா.சிவலிங்கம் இந்த குட்டை தென்னை ரகம் குறித்து பேசுகையில், "என் வீட்டில் இதே போன்று ஆயிரம் காச்சி தென்னை மரங்கள் 10 வைத்தேன். அவை இப்போது பாளை விட்டு கொத்து கொத்தாக காய்ப்பதை பார்க்கவே சந்தோஷமாக உள்ளது. எட்டி பறிக்கும் தூரத்துல இருப்பதால் ஆள் தேட வேண்டிய அவசியமும் இல்லை.பட்ஜெட்டும் இடிக்கவில்லை.இதே போன்ற ஆயிரம் காச்சி தென்னை மரங்களை என் சென்னை வீட்டில் கூட வைத்து உள்ளேன். அவை கூட நன்றாக காய்க்கின்றன. அங்கு அக்கம் பக்கம் உள்ள மக்கள் அனைவரும் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர் என்றார்
இவற்றை எங்கு வாங்குவது?
அரசு மற்றும் தனியார் நர்சரிகளில் வாங்கலாம்.ஒரு தென்னங்கன்றின் விலை 600 முதல் 1000 வரை இருக்கும். இடத்தை பொறுத்து விலை இருக்கும். என்ன விவசாய நண்பர்களே, 'பேசாமல் நாம் கூட இந்த ஆயிரம் காச்சி தென்னை சாகுபடியில் இறங்கி விடலாம். ' என்று முடிவு செய்து விட்டது போல தெரிகிறதே. இன்னும் என்ன தாமதம். உடனே களத்தில் இறங்கி விட வேண்டியது தானே? பலன் நிச்சயமாக கிடைக்கும்.
Jayanthi Thirupathi
KJ Staff
மேலும் படிக்க
நோய்களை தீர்க்கும் வேப்பிலையின் மருத்துவ பயன்கள்!
தேனி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மலர் தோட்டம் உள்ளிட்ட பல சிறு தொழில்கள் குறித்து படிக்க..