சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம். இவற்றில் சில தானியங்களுக்காகவும், வேறுசில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன.
இப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன. இவ்வினங்கள், எல்லாக் கண்டங்களையும் சேர்ந்த வெப்பவலய, குறை வெப்பவலயப் பகுதிகளையும், தென்மேற்கு பசிபிக், ஆஸ்திரேலியா பகுதிகளையும் தாயகமாகக் கொண்டவை. இது சிறு தானியப் பயிராகும்.
தமிழகத்தில் பொங்கல் திருநாளில் வெண்சாமரச் சோளம் பயன்படுத்தப்படும். இன்றும் திருச்சி, பெரம்பலூர் மாவட்ட கிராமங்களில் வெகு சிலரால் பயிரிடப்படுகிறது. இது நாட்டுவகைச் சோளம். பெரும்பாலானோர் கலப்பின ரகச் சோளங்களையே பயிரிடுகின்றனர்.
வெண்சாமரச் சோளம்: இந்தியாவில் அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சோளத்தை முழுதாகவோ, உடைத்தோ வேகவைத்து அரிசிபோன்றும், அரைத்து மாவாகவும் உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சோளம் நொதித்தல் தொழிற்சாலை, எரிசாராயம், கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளைச் சோளம்: அரிசியைப் போன்ற தன்மையையும் அதைவிடப் பல சத்துகளையும் கொண்டது. சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு, நார்ச் சத்துகள் உள்ளன. சிறுதானியங்களில் குறைந்தளவே குளுக்கோஸ் இருப்பதால், அவை மனிதனை சர்க்கரைநோயிலிருந்து காப்பாற்றக்கூடியவை.
சிவப்பு சோளம்: இவ்வகைச் சோளம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவாகப் பயன்படுகிறது. பெரும்பாலும் தென் ஆப்பிரிக்காவில் விளைவிக்கப்படும் இந்தச் சோளம், தற்போது மழை குறைவாகப் பொழியும் அனைத்து நாடுகளிலும் விளைவிக்கப்படுகிறது. இது 4 மீட்டர் உயரம் வரை வளரும். 3 முதல் 4 மிமீ வரை சுற்றளவு கொண்டிருக்கும். இலைகள் மருந்து, எத்தனால் தயாரிக்கப் பயன்படுகிறது.
சோளம் அனைத்துப் பகுதிகளிலும் விளைவதற்கு ஏற்றப் பயிர். சிறு வெள்ளைச்சோளமே இந்தியாவின் இயற்கைச் சோளம். மக்காச்சோளத்தின் உற்பத்தியில் தற்போது இந்தியா உலகில் 5ஆவது இடத்தில் உள்ளது. மக்காச்சோளம் தென் அமெரிக்காவிலிருந்து வந்த பயிர் ஆகும். சிறுசோளமும், மக்காச்சோளமும் இந்தியாவின் பாரம்பரியப் பயிர்கள்.
2011இல் சோளத்தின் உற்பத்தி நைஜீரியாவில் 12.6%, இந்தியாவில் 11.2%, மெக்ஸிகோவில் 11.2%, அமெரிக்காவில் 10% ஆகும். சோளம் பரவலான வெப்பநிலையில், அதிக உயரத்தில் வளரும். நச்சு மண்களிலும், மிகவும் வறட்சியிலும், பசிபிக் பகுதியிலும்கூட விளையும்.
சாகுபடி முறை: சோளத்தை ஆண்டுக்கு ஒருமுறை ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்யலாம். மானாவாரி நிலங்களில் சித்திரையில் உழுது, மண்ணை ஆறப்போட்டு, ஆடியில் மழை கிடைத்ததும், விதைத்து, நிலத்தை உழவேண்டும். ஆவணியில் களையெடுக்க வேண்டும். வேறு பராமரிப்பு தேவையில்லை. விளைச்சலைப் பொறுத்து, மார்கழி கடைசிக்குள் அறுவடை செய்துவிட வேண்டும். நன்றாக விளைந்த சோளம், முற்றி, சிறிய அளவில் வெடித்து, அரிசி வெள்ளையாக வெளியே தெரியும்போது அறுவடை செய்யலாம். நிலத்திலிருந்து அரையடி விட்டு, தட்டையை அறுத்து, கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும்.
பயன்கள்: அமெரிக்காவில் மற்ற தானியங்களைவிட சோளமே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் அதிக மாவுச்சத்து, கொழுப்பு, புரதம் உள்ளதால் சத்தான உணவாகக் கருதப்படுகிறது. உணவுக்காக மேலைநாடுகளில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. மக்காச்சோள அவல் பெரும்பாலும் காலைச் சிற்றுண்டியாகப் பயன்படுத்தப்படுகிறது.
வளர்ந்த நாடுகளில் கால்நடைத் தீவனமாகவும் சோளம் பயன்படுகிறது. கஞ்சி சர்க்கரை (சோளச் சர்க்கரை, டெக்ஸரின்) காகன் சிரப் தொழில், ஆல்கஹால் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. சோள உணவுகள் உடலுக்கு உறுதி அளிக்கவல்லவை. உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். சோளம் பால் உற்பத்தியை அதிகரிக்கும். சோளக்கழிவுகள் கறவை மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுகின்றன. சோளம் உயிரி எரிபொருள் தயாரிப்புக்குப் பயன்படும் முக்கிய பொருளாகும்.