உலகிலேயே தண்ணீருக்கு அடுத்தப்படியாக தேநீர் (TEA) தான் அதிகமாக அருந்தப்படும் பானமாக கருதப்படுகிறது. தேநீர் சும்மாவொன்றும் கிடைத்துவிடுவதில்லை தானே. தேநீருக்கு அடிப்படை மூலமாக விளங்குவது தேயிலை தான். அந்த வகையில் தேயிலை செடி குறித்த பல தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார் வேளாண் ஆலோசகரான அக்ரி சு.சந்திர சேகரன். அவற்றின் விவரம் பின்வருமாறு-
நாம் இன்று விரும்பி பருகும் தேநீர், நம்முடைய இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1850-களில் அறிமுகம் செய்யபட்டது. இமயமலை அடிவாரத்தில் உள்ள டார்ஜிலிங் பகுதியில் தேயிலை நடவு செய்ய பட்டது. உலகின் மொத்த தேயிலை உற்பத்தியில் சீனா (36%) முதலிடத்திலும், அடுத்தப்படியாக இந்தியா (22.6% ) இராண்டாம் இடத்திலும் உள்ளது. இந்தியாவில் 1920-க்குப் பின்னர் தான் தேநீர் பிரபலமான பானமானது.
தேயிலை பயிரிடப்பட மண்வளம் எவ்வாறு இருக்க வேண்டும்?
இந்தியாவில் முதல்முறையாக தேயிலை பயிரிட்டவராக மணி ராம் தேவான் என்பவர் அறியப்படுகிறார். தேயிலையானது, கமேல்லியா குடும்ப வகையினைச் சார்ந்தது. தேயிலை செடிகள் மலைச்சரிவுகளில், தரைமட்டத்திலிருந்து சுமார் 2500 மீட்டர் உயரத்தில் உள்ள இடங்களில் (pH 4.5--5.5) செழித்து வளரும் தன்மைக்கொண்டது. மேலும் ஆண்டு முழுவதும் சூரிய வெப்பமும், நல்ல மழையும் குளிர்ச்சியான வெப்ப நிலையுள்ள இடங்களில் தேயிலை நன்றாக வளரும். உதாரணத்திற்கு அஸ்ஸாம் பள்ளத்தாக்கு, மூணாறு, ஊட்டி போன்ற பகுதிகள்.
தேயிலை செடியிலிந்து எப்படி இலை பறிக்கப்படுகிறது?
தேயிலை செடி தானாகவே 8 முதல்10 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. ஆனால் தேயிலை பயிரிடுவோர் அதனுடைய இலையை பறிப்பதற்காக, கைக்கு எட்டும் வகையில் கிளைகளை வளரவிடமால் கத்தரித்து 2 மீட்டர் உயரத்திற்குள்ளாகவே வைத்து இருப்பார்கள். தேயிலையின் பூ வெண்மையான நிறத்தில் நல்ல மணத்துடன் இருக்கும்.
தேயிலை செடி தழைத்து வளரும் போது கிளைகளில் நுனியில் உள்ள இரண்டு தளிர்களையும், மொட்டுகளையும் (துளிர்க்க, துளிர்க்க) பறித்துவிடுவார்கள். இதுவே நாம் அருந்த பயன்படுத்தப்படும் தேயிலையாகும்.
தேயிலையின் வகைகள்?
இந்தியாவில் தயாரிக்கப்படும் தேயிலை கருப்புத்தேயிலை என அழைக்கப்படுகிறது. வதங்கிய தேயிலையினை நொதிக்க வைக்காமல், உலர வைத்தால் பச்சை நிறத்துடன் இருக்கும். இதனை தான் பச்சைத்தேயிலை (GREEN TEA) என்கிறார்கள்
தேயிலையில் என்ன இருக்கிறது ?
தேயிலையில் காபீன் (CAFFEINE) மற்றும் டானின் (TANNIN) ஆகிய மூலப்பொருட்கள் உள்ளன. அளவோடு பருகி வந்தால் தேநீரில் உள்ள காபீன் உற்சாகத்தை கொடுக்கும். மிகுதியாக பருகினால் அது இரத்த அழுத்தத்தை அதிகமாக்கி, நரம்பு மண்டலத்தை கெடுத்துவிடும். டானின் சற்று நச்சுத்தன்மை வாய்ந்தது,அளவோடு பருகினால் ஆபத்தில்லை.
தேயிலை குறித்த படிப்பிற்கு "டேசியோகிராபி" (Tasseography) என அழைக்கப்படுகிறது. தேயிலை சாகுபடிக்கு தேவையான உதவிகள் செய்வதற்காக ( UPASI) என்ற தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது என வேளாண் ஆலோசகர் அக்ரி.சு.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
Read more: