வீட்டு தோட்டம் அமைப்பதற்கான இடுபொருட்களை, மானிய விலையில் விற்பனை செய்யும் பணிகளை, தோட்டக்கலை துறை துவக்கியுள்ளது.
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில், மாடி தோட்டம்,வீட்டு தோட்டம் அமைப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், தோட்டக்கலை துறையால், உங்கள் வீட்டு தோட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது, மாநிலம் முழுதும் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனைப் பயன்படுத்தி வீட்டில் தோட்டம் அமைத்தால், செடிகள் நன்றாக வளரும்.கோடை காலத்தில் அவற்றில் இருந்து காய்கறிகள், கீரைகள், மூலிகைகளை அறுவடை செய்து பயன்படுத்த முடியும்.
இதனைக் கருத்தில் கொண்டு, வீட்டு தோட்டம் அமைப்பதற்கான இடு பொருட்கள் விற்பனையை, தோட்டக்கலை துறை துவக்கியுள்ளது. இதன் மொத்த விலை, 850 ரூபாய். மானிய விலையில், 510 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதில், 12 கிலோ எடையுள்ள, ஆறு தென்னை நார் கழிவு கட்டிகள், ஆறு செடி வளர்ப்பு பைகள், வேப்ப எண்ணெய், 'அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ்' ஆகிய உயிர் உரங்கள் (Bio-Fertilizers) இடம்பெற்று இருக்கும்.
கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், பூசணிக்காய், கொத்தவரை, தக்காளி, சுரைக்காய் உள்ளிட்ட, ஆறு வகையான காய்கறி விதை பாக்கெட்களும் இருக்கும். தோட்டம் அமைப்பதற்கான செயல் விளக்க கையேடும் வழங்கப்படுகிறது.
சென்னையில், மாதவரம் தோட்டக்கலை செயல் விளக்க பூங்கா, தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா, அண்ணாநகர் தோட்டக்கலை துறை டிப்போ ஆகியவற்றில் இடுபொருள் விற்பனை, துவக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலை இடுபொருட்கள் மட்டுமின்றி, சாகுபடிக்கு தேவையான பூவாலி உள்ளிட்ட, சிறு கருவிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. பூந்தொட்டிகள், 8 ரூபாய் முதல், 190 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. பூந்தொட்டிகளை வைப்பதற்கான தட்டுக்கள், 5 ரூபாய் முதல், 46 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரே இடத்தில் சாகுபடிக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதால், வீட்டு தோட்டம் அமைப்பவர்கள் அலைய தேவையில்லை.ஞாயிறு விடுமுறை தவிர, அனைத்து நாட்களிலும் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை விற்பனை நடக்கும்.
தகவல்
மகேந்திரகுமார்
துணை இயக்குனர்
தோட்டக்கலை துறை
மேலும் படிக்க...
புரெவி புயல் வலுவிழந்தது- தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை!
ஒரு ஏக்கரில் ரூ.3 லட்சம் வருமானம் -பளிச் லாபம் தரும் பட்டு வளர்ப்புத்தொழில்!