பருவமழை பெய்து வருவதால், விதைகளைச் சரியான ஈரப்பதத்தில் சேமித்து வைக்க வேண்டியது மிக மிக அவசியம் என திருச்சி மாவட்ட வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஈரப்பதம் (Moisture)
விவசாயத்தில் வெற்றி பெற, அதிக மகசூல் பெற்றுக் கூடுதல் வருவாயை ஈட்ட பயிர் சாகுபடி சார்ந்தப் பல்வேறு வளைவு நெளிவுகளைக் கொண்ட அம்சங்களை நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அந்த அம்சங்களில் ஒன்றுதான் விதைகளின் ஈரப்பதம்.
நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பதத்தை விட அதிகரித்தாலோ, குறைந்தாலோ விதையின் தரம் பாதிக்கப்படும். தரம் குறைந்தால், மகசூலும் குறைந்து வருவாய் பாதிப்பும் ஏற்படக்கூடிய சூழல் உருவாகும். எனவே பயிர்களைப் பராமரிக்க வேண்டிய ஈரப்பதத்தைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட விதைகளின் தரப்படி ஒவ்வொரு பயிருக்கும் ஈரப்பதம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிர்கள்- ஈரப்பதம் (Crops- Moisture)
நெல் பயிருக்கு ஈரப்பதம் 13 சதவீதமும், சோளம், மக்காச்சோளம், கம்பு, மற்றும் இராகி 12 சதவீதமும், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகளுக்கு 9 சதவீதமும் இருத்தல் வேண்டும்.
விதைகளை சரியான ஈரப்பதத்தில் சேமித்து வைப்பதன் மூலமே, விதையின் தரம் குறையாமல் பாதுகாக்க முடியும். மேலும் சேமித்து வைக்கும் காலத்தில் பூச்சி மற்றும் பூஞ்சான நோய் தாக்குதலில் இருந்து விதையை பாதுகாக்கலாம்.
பதர் இல்லாத விதை
தரமான விதைகள் என்பது நல்ல முளைப்புத்திறன் உள்ளதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பிற இரக கலப்பு இல்லாமலும், சரியான ஈரப்பதம் உள்ள விதைகளாகவும், மண்கட்டிகள் மற்றும் பதர் இல்லாத விதைகளாகவும் இருக்க வேண்டும்.
விதையின் ஈரப்பதத்தை அறிய திருச்சி விவசாயிகள் காஜாமலைக் காலனியில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்தை அணுகலாம்.
விதை பரிசோதனை (Seed test)
பரிசோதனைக் கட்டணமாக ஒரு விதை மாதிரிக்கு ரூ.30/ மட்டுமே செலுத்தி, பரிசோதனை விபரங்களைப் பெறலாம். தரமான விதைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நல்ல மகசூலையும் அதிக வருவாயையும் விவசாயிகள் ஈட்ட முடியும்.
தகவல்
து.மனோன்மணி
விதை பரிசோதனை அலுவலர்
திருச்சி
மேலும் படிக்க...
இன்றும் நாளையும் மிக கன மழை எச்சரிக்கை- சென்னைக்கு ரெட் அலர்ட்!
Freezer Boxல் வைக்கப்பட்ட உடல்: 7 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் இருந்த அதிசயம்!