கடன் வாங்கினால் அதை திருப்பிக் கொடுக்கணுமா? என்று பல முறை சிந்திப்பவர்கள்தான் அதிகம். இந்த சூழலில் 11 ஆண்டுகளுக்கு முன் கடனாக நின்ற பத்து ரூபாய்க்குப் பதிலாக வட்டியும் முதலுமாக 25000 ரூபாயை செலுத்தி கடனைத் தீர்த்திருக்கிறார் மோகன். மனதை நெகிழ வைக்கும் சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
வேர்க்கடலை (Groundnut)
அமெரிக்காவில் வசிக்கும் மோகன் தனது குடும்பத்துடன் காக்கிநாடாவிற்கு வந்திருந்தார். அருகிலுள்ள கொத்தப்பள்ளி பீச்சில் காலாற நடக்கலாம் என்று வந்திருந்தனர். மோகனுக்கு பத்து வயதில் ஒரு மகன். நேமணி பிரணவ். எட்டு வயதில் மகள் சுசித்ரா.
பீச்சில் கிஞ்சலா பெட்ட சாத்தையா என்பவர் வறுத்த வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்தார். பிரணவ்வுக்கும் சுசித்ராவுக்கும் வேர்க்கடலை கொறிக்க ஆசை.
"அப்பா , வேர்க்கடலை வேணும்... வாங்கித் தாங்க'' என்று கேட்க... "சரி ஆளுக்கு ஒரு பொட்டலம் வாங்கிக்கிங்க...' என்று சொல்ல... சாத்தையா ஆளுக்கு ஒரு பொட்டலம் கொடுத்தார்.
"எவ்வளவு ஆச்சுப்பா..' என்று மோகன் கேட்க .. "பத்து ரூபா ஸார்..' என்று சாத்தையா சொல்ல...
பர்ஸை எடுக்க பேண்ட் ஜேப்பில் மோகன் கையை விட ... பர்ஸ் கிடைக்கவில்லை. பீச்சிற்கு வரும் அவசரத்தில் பர்ஸை எடுக்காமல் மோகன் கிளம்பி வந்து விட்டார்.
அதற்குள் பிரணவ், சுசித்ரா பொட்டலத்தைப் பிரித்து வேர்க்கடலையைக் கொறிக்க ஆரம்பித்துவிட்டனர்.
மோகனுக்கு வியர்த்துவிட்டது. தர்ம சங்கடத்துடன் கையைப் பிசைந்தவாறே..."மன்னிசிடுப்பா. பர்ஸை எடுக்க மறந்துட்டேன்... நாளை கொடுத்திடறேன்..' என்று தயங்கித் தயங்கிச் சொல்ல..
"அதுக்கென்ன சார்... பரவாயில்லை... குழந்தைகள் வேர்க்கடலையைக் கொரிக்கட்டும்..' என்றவாறே சாத்தையா நகர்ந்தார். "இருப்பா... உன்னை நான் போட்டோ எடுத்துக்கிறேன்..' என்றவாறே மோகன் கொண்டு வந்திருந்த கேமராவால் சாத்தையாவைப் படம் பிடித்தார்.
அமெரிக்கா பயணம் (Travel to America)
மறக்காமல் மோகன் அடுத்த நாள் பீச்சிற்கு வந்து சாத்தையாவைத் தேட அன்று சாத்தையா வேர்க்கடலை விற்க வரவில்லை. ஏமாற்றத்துடன் மோகன் வீடு திரும்பினார். பிறகு அடுத்தடுத்து வேறு வேலைகள் வர, மோகனால் பீச்சிற்கு மீண்டும் வர முடியாமல் போனது. குற்ற உணர்வுடன் குடும்பத்துடன் அமெரிக்க திரும்பினார்.
அமெரிக்கா வந்த போதிலும் சாத்தையாவுக்கு பத்து ரூபா கொடுக்காமல் வந்துவிட்டோமே என்ற குறை மோகனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
தேடல் (Searching)
காக்கிநாடாவில் தெரிந்தவர்களிடத்தில் சொல்லி சாத்தையாவைத் தேடச் சொன்னார். ஆனால் அவர்களால் சாத்தையாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பத்தாண்டுகளில் பல முறை முயன்றும் சாத்தையாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நடுவில் காக்கிநாடா வந்த மோகனும் சாத்தையாவைத் தேடினார். ஆனால் மோகனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதி முயற்சியாக தனது நண்பரான காக்கிநாடா சட்டமன்ற உறுப்பினரான சந்திரசேகர ரெட்டிக்கு சாத்தையாவின் படத்தை அனுப்பி எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்கச் சொல்ல, ரெட்டியும் தனது முகநூலில் சாத்தையாவின் படத்தைப் பதிவு செய்து சாத்தையாவைப் பற்றிய தகவல் தருமாறு கேட்டுக் கொண்டார். அந்தப் பதிவைப் பார்த்த சிலர் சாத்தையா உயிருடன் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்துவிட்டார். ஆனால் அவரது குடும்பத்தினர் இருக்கின்றனர்' என்று அவர்களின் முகவரியை ரெட்டியிடம் தெரிவிக்க, ரெட்டி மோகனிடம் தெரிவித்தார்.
கடன் அடைப்பு (Loan Closure)
கடலை விற்றவர் இறந்து விட்டார். அந்தப் பத்து ரூபாய் விஷயத்தை விட்டுவிடுவோம் என்று மோகன் நினைக்கவில்லை. தனது மகனையும் மகளையும் காக்கிநாடாவிற்கு அனுப்பி வைத்தார். சாத்தையாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கடனைக் கழிக்கச் சொன்னார். அன்று 10 வயதாக இருந்த பிரணவ் இன்று 21 வயது இளைஞன். தங்கை சுசித்ராவுக்கு 19 வயது.
சென்ற வாரம், காக்கிநாடா வந்த பிரணவ், சுசித்ரா, நேராக சாத்தையாவின் குடும்பத்தினரைச் சந்தித்து துக்கம் விசாரித்து விட்டு, சாத்தையாவிடம் 11 ஆண்டுகளுக்கு முன் இரண்டு பொட்டலம் கடலை வாங்கி பணம் தராததைக் கூறி, 25000 ரூபாய் கொடுத்தார்கள். மோகனின் கடன் தீர்த்த கடமை உணர்வை அறிந்து சாத்தையாவின் குடும்பத்தினர் நெகிழ்ந்து போனார்கள்.
மேலும் படிக்க
திருடு போன தங்க நகைகள் 23 ஆண்டுகளுக்கு பின் ஒப்படைப்பு!
காயர் பொருட்களை பிளாஸ்டிக்குக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்: ஐ.நா. ஆலோசகர் தகவல்!