மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் இதனைப் பதிவு செய்யாவிட்டால், இனி சம்பளம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, (மாற்று திறனாளிகள் உட்பட) அனைவரும் காலை மற்றும் மதியம் தங்களின் வருகையினை தவறாமல் NMMS APP வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே தாங்கள் பணிக்கு வருகை தந்தது உறுதி செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் என்பது இந்திய அரசின் வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகும். 2005 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த இந்த திட்டம் முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2009-ஆம் ஆண்டு காந்தி பிறந்த நாளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கட்டாய வேலைவாய்ப்பு
இத்திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் பொதுமக்களுக்கு 100 நாட்கள் கட்டாயம் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம், கிராமங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படுவது, நீர் வழித்தடங்களை சீரமைப்பது, புதிய பண்ணைக் குட்டைகளை அமைப்பது, மரக் கன்றுகள் நட்டு வன வளம் பெருக்குவது போன்ற பணிகள் செய்யப்படுகின்றன.
16ம் தேதி முதல்
தற்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகள் மற்றும் பணியாளர்களின் வருகை இதுவரை கையால் (Manual ) பதிவு செய்து ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இத்திட்டத்தின் பணிகள் மற்றும் பணிபுரியும் பணியாளர்களின் வருகை விவரங்கள் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும், அரசு விதிமுறைகளின்படி உரிய நேரம் வரை பணிபுரிவதை உறுதி செய்யும் வகையில் Nrega இணையதளத்தில் பதிவாகும் வகையில் National Mobile Monitoring System (NMMS) APP வாயிலாக பணிகள் மற்றும் பணிபுரியும் பணியாளர்களின் வருகையினை பதிவு செய்தல் 16.05.2022 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய, மாநில அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்சியர் தகவல்
எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் (மாற்று திறனாளிகள் உட்பட) காலை மற்றும் மதியம் தங்களின் வருகையினை தவறாமல் NMMS APP வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே தாங்கள் பணிக்கு வருகை தந்தது உறுதி செய்யப்படும் என பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...