பொள்ளாச்சி விவசாயிகள் நிலத்தடி நீர் வீணாகாமல், பயிருக்கு தேவையான அளவு பாசனம் செய்ய நுண்ணீர் பாசனம் அமைக்க வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
வேளாண்துறை வாயிலாக, நடப்பாண்டில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோவை மாவட்டத்தில், 1,300 ஹெக்டேருக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க, 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 105 ஹெக்டேருக்கு, 99.5 லட்சம், தெற்கு ஒன்றியத்தில், 130 ஹெக்டேர் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு 1.27 கோடிரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி கூறுகையில், ''சாகுபடி பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைப்பது, காலச்சூழலுக்கு மிகவும் இன்றியமையாததாகும். இதில், சொட்டுநீர் பாசனம், மழை துாவுவான் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் ஆகியவை அடங்கும்.
100 % மானியம்
இத்திட்டத்தில் அனைத்து வகையான விவசாயிகளும் பயனடையலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சவீத மானியம், பிற விவசாயிகளுக்கு, 12.5 ஏக்கர் வரை, 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது, என்றார்.வடக்கு வேளாண் உதவி இயக்குனர் மீனாம்பிகை கூறுகையில், நுண்ணீர் பாசனம் அமைக்கும் போது, குறைந்த நீரில், அதிக பரப்பில் சாகுபடி செய்யலாம். இதில், 70 சதவீதம் வரை தண்ணீர் மற்றும் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.
மகசூல்
ரசாயன உரங்களை நீரில் கலந்து பயிர்களுக்கு இட முடியும் என்பதால், 50 சதவீதம் வரை உரம் சேமிக்கப்படும்.மூன்று மடங்கு வரை மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. களை வளர்ச்சி கட்டுப்படும். பயிர்கள் சீரான வளர்ச்சி, மண் அரிப்பு தடுப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை விவசாயிகள் பெற முடியும்,'' என்றார்.
தேவைப்படும் ஆவணங்கள்
சிட்டா
அடங்கல்
ஆதார்
நில வரைபடம்
ரேஷன் அட்டை
கூட்டு வரைபடம்
நீர் மற்றும் மண் பரிசோதனை சான்று,
சிறு, குறு விவசாயி சான்று,
புகைப்படம்
நுண்ணீர் பாசன மானியம் பெற விரும்பும் விவசாயிகள், மேலேக் குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன், வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.
மேலும் படிக்க...