மிசோரமில் குருங் ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் ரயில் பாலம் இன்று காலை 9:30 மணியளவில் இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் தற்போது வரை உயிரிழந்து உள்ளனர். 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத் தலைநகர் ஐஸ்வாலில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள சாய்ராங் என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலை 10 மணியளவில் சம்பவம் நடந்தபோது 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் இருந்ததால், மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
“தற்போது வரை 17 பேர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது”என்று வடகிழக்கு எல்லை ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சப்யசாச்சி டி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த துயர சம்பவத்திற்கு மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவின் விவரம் பின்வருமாறு- "இந்த சோக சம்பவத்தால் ஆழ்ந்த வருத்தமும், மனதளவில் பாதிக்கப்பட்டும் உள்ளேன். உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். மீட்புப் பணிகளுக்கு பெருமளவில் வந்து உதவிய மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மிசோரம் உள்துறை அமைச்சர் லால்சம்லியானா சட்டசபையில் கூறுகையில், விபத்து நடந்தபோது சுமார் 35-40 தொழிலாளர்கள் அந்த இடத்தில் இருந்ததாகவும் அவர்களில் 17 பேர் இறந்ததாகவும் கூறினார். ஐஸ்வால் காவல் கண்காணிப்பாளர் ரெக்ஸ் வான்சாங் மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி உள்ளனர்.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் (PMO) அறிவித்துள்ளது.
”மிசோரமில் பாலம் விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் PMNRF நிதியிலிருந்து வழங்கப்படும்” என பிரதமர் அலுவலக டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக பிரதமர் தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்ப்பாராத இச்சம்பவம் இந்திய மக்களிடையே கவலையினை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல மாநில முதல்வர்களும் இச்சம்பவத்திற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் காண்க:
சிவகாசியில் கொட்டித்தீர்த்த கனமழை- சென்னைக்கும் எச்சரிக்கை
Chandrayaan 3: அந்த கடைசி 20 நிமிஷம் தான் ரொம்ப முக்கியம்- ஏன்?