உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பயனாளிகளுக்கு தீபாவளி போனஸாகக் கிடைக்கும் எனத் தெரிகிறது.
38 லட்சம் பேர்
குஜராத் மாநில அரசு உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் சுமார் 38 லட்சம் பயனாளிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைகிறது விலை
இதுமட்டுமல்லாமல், சிஎன்ஜி (CNG) மற்றும் பிஎன்ஜி (PNG) எரிவாயு விலையை 10% குறைப்பதாகவும் குஜராத் அரசு அறிவித்துள்ளது. இதனால் சிஎன்ஜி கேஸ் விலை கிலோவுக்கு 7 ரூபாய் குறையும். அதேபோல பிஎன்ஜி விலை ஒரு SCMக்கு 6 ரூபாய் குறையும்.
14 லட்சம் பேர்
இதனால் சுமார் 14 லட்சம் வாகன ஓட்டிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி எரிவாயு விலை மீதான வாட் வரி குறைப்பால் குஜராத் அரசுக்கு கூடுதலாக 1650 கோடி ரூபாய் சுமை ஏற்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
தேர்தலையொட்டி
இதுமட்டுமல்லாமல், உஜ்வாலா பயனாளிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு இலவச சிலிண்டர்களும், சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி எரிவாயு விலை குறைப்பும் பொதுமக்களுக்கான தீபாவளி பரிசு என குஜராத் கல்வி துறை அமைச்சர் ஜித்து வகானி தெரிவித்துள்ளார். எனினும், இந்த அறிவிப்புகள், குஜராத் மாநிலம் சட்டமன்ற தேர்தலைக் கருத்தில்கொண்ட அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது.
குஜராத் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இன்னும் குஜராத் மாநிலத்துக்கான தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடவில்லை.182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பிஜேபி தொடர்ந்து 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...