5ஜி இணைப்புக்கான கட்டணத்திற்கு பெரிதளவு வித்தியாசம் இல்லாத வகையில் 4ஜி கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களை 5ஜி சேவைக்கு மாற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கள் அன்று, ‛5ஜி ஸ்பெக்ட்ரம்' ஏலம் முடிவு பெற்றதை அடுத்து, அடுத்தகட்டமாக, தொலைதொடர்பு நிறுவனங்கள், கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கும் என, தொலைதொடர்பு நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
5ஜி ஏலம் (5G Auction)
5ஜி கட்டணம் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாட்டின் முதல் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம், 1.5 லட்சம் கோடி ரூபாயுடன் முடிவுக்கு வந்துள்ளது. ஏலம் எடுப்பதற்காக ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிடத்தக்க அளவிலான தொகையை செலவு செய்துள்ளன. இதன் காரணமாக, அந்த செலவை ஈடுகட்டும் விதமாக, தொலைபேசி மற்றும் பிராட்பேண்டு சேவைகளுக்கான கட்டணத்தை, மீண்டும் ஒருமுறை நிறுவனங்கள் அதிகரிக்க கூடும். அடுத்து, 4ஜி சேவைக்கும் 5ஜி சேவைக்கும் இடையே கட்டணத்தில் வித்தியாசம் அதிகம் இருப்பின், வாடிக்கையாளர்களை ஈர்ப்பது சிரமமாக இருக்கும்.
இதனால், தற்போது சேவையில் இருக்கும் 4ஜி இணைப்புக்கான கட்டணத்தை அதிகரிக்க நிறுவனங்கள் முயற்சிக்கும். பெரிய அளவில் கட்டண வித்தியாசம் இல்லை எனும்பட்சத்தில், வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் 5ஜி சேவைக்கு மாற முன்வருவர்.
4ஜி கட்டண உயர்வு (4G Charges Hike)
கட்டண உயர்வை பொறுத்தவரை, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நான்கு சதவீத உயர்வை நிறுவனங்கள் அறிவிக்க கூடும் அல்லது, நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி., / 4ஜி இணைப்புக்கான கட்டணத்தில், 30 சதவீத உயர்வை அறிவிக்க கூடும். நிறுவனங்களை பொறுத்து, கட்டண உயர்வு குறித்த முடிவுகள் வேறுபடக்கூடும். ஆனால், கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க