புழல் அருகே, தவறுதலாக குப்பை கிடங்குக்கு சென்ற, 9 சவரன் 'நெக்லஸை' கண்டெடுத்து ஒப்படைத்த துாய்மை பணியாளருக்கு பாராட்டுகள் குவிகின்றன. புழல் அடுத்த வினாயகபுரம், காஞ்சி நகரைச் சேர்ந்தவர் ரோஜா ரமணி, 47. இவர், நேற்று முன்தினம் பொங்கலுக்காக வீட்டை சுத்தம் செய்தார். வீட்டில் பொருட்களை சீரமைத்து, நகைகளை சரிபார்த்த போது, 9 சவரன் 'நெக்லஸ்' காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து, வீடு முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட குப்பை கழிவுகளுடன், நகையும் வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அந்த பகுதியில் குப்பை அகற்றும் துாய்மை பணியாளர் சஞ்சீவ் குமார், 36, என்பவரிடம், நடந்ததை தெரிவித்துள்ளார்.
குப்பை தரம் பிரிப்பு (Garbage quality separation)
பெரம்பூர், வீனஸ் நகரில் வசிக்கிறார் சஞ்சீவ் குமார். குப்பைகள் அகற்றப்பட்டு, மாதவரம் மண்டலம் 26வது வார்டு, வினாயகபுரம், வளர்மதி நகர் அருகே உள்ள கிடங்கில் கொட்டப்பட்டிருந்தது. இதை அறிந்து, துாய்மை பணியாளர், சஞ்சீவ் குமார் அங்கு சென்றார். அங்கு, காஞ்சி நகர் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட குப்பை, தரம் பிரித்து கொட்டப்பட்டிருந்தன.
குப்பையில் 9 சவரன் நகை (9 pown necklaces in the trash)
மக்கும் குப்பை, மக்கா குப்பையாக இரு பிரிவுகளாக கொட்டப்பட்டிருந்தது. அதில், பொறுமையாக தேடிய போது, 9 சவரன் நெக்லஸ், பெட்டியுடன் இருந்தது. அதை, தன் வார்டு கண்காணிப்பாளருடன் சென்று, ரோஜா ரமணியிடம் ஒப்படைத்தார். நகை கிடைத்த சந்தோஷத்தில், ரோஜாரமணியும் அவரது குடும்பத்தினரும், சஞ்சீவ் குமாருக்கு நன்றி தெரிவித்தனர். பெரம்பூரில் சஞ்சீவ் குமாரின் வீடு தேடிச் சென்று பொங்கல் பரிசும் வழங்கினர். துாய்மை பணியாளர் சஞ்சீவ் குமாரின் நேர்மையை, அந்த பகுதி மக்களும், அவரது சக பணியாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் பாராட்டினர்.
நேர்மையான மனிதர் (Honest man)
'ஹீரோ'வாக்கிய நேர்மை ரோஜாரமணியின் மகன் ஸ்ரீநாத் கூறியதாவது: நாங்கள் தொலைத்த நகையின் மதிப்பு, 4 லட்சம் ரூபாயாகும். அவ்வளவு தொகைக்குரிய நகையை யாருக்குத்தான் திரும்ப கொடுக்க மனது வரும். அதனால், அந்த நகை கிடைக்கும் என்ற நம்பிக்கையே இல்லை. ஆனால், சஞ்சீவ் குமாரின் நேர்மையால், எங்களுக்கு அது திரும்பக் கிடைத்தது. அதற்காக, அவருக்கு எத்தனை முறை நன்றி தெரிவித்தாலும், எங்களது மகிழ்ச்சி குறையாது. அவர், எங்களுக்கு 'ஹீரோ'வாகி விட்டார்.
மேலும் படிக்க
சேவலுக்குப் பிறந்தநாள் கொண்டாடிய குடும்பம்: இணையத்தில் வைரல்!