தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் மழை நீடித்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்த மழையால் அமராவதி அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
வலுவிழந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
வட தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்த நிலையில் தமிழகத்தின் அநேக இடஙக்ளில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.
தற்போது அந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்து விட்டது, இருப்பினும் வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவ காற்றின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, சிவகங்கை, தஞ்சாவூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொட்டித் தீர்த்த கனமழை
திருவாரூரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தஞ்சாவூர் மற்றும் ஒரத்தநாடு, சூரக்கோட்டை ஆகிய ஊர்களில் சுமார் ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது.
குமாரபாளையம், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஆகிய இடங்களில் கனமழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. காரைக்காலில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை காரணமாக விவசாயிகளுக்கு மானாவாரி விதை நெல் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4 மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. பலத்த மழை காரணமாக சூரமங்கலம் அருகே அந்தோணிபுரம் நீரோடை அருகே உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.
கனமழையால் மூன்று பேர் பலி
கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கியதில் இருசக்கர வாகனத்தில் வந்த மந்தாரங்குப்பத்தை சேர்ந்த இரண்டு பேர் நிகழ்விடத்திலேயே உயிர் இழந்தனர். சத்தியவாடியை சேர்ந்த கோலோஞ்சி என்பவர் மழையினால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் உயிர் இழந்தார்.
அமராவதி அணை நீர் மட்டம் உயர்வு
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த பரவலான மழையால் 90 அடி கொள்ளளவை கொண்ட அமராவதி அணையின் நீர் மட்டம் தற்போது 85.02 அடியாக உயர்ந்துள்ளது மேலும் அணையில் இருந்து நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக பட்ச மழை பொழிவாக புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூரில் 8 செ.மீ மழையும், மதுரை மேட்டுப்பட்டி, திருச்சி மருங்காபுரி ஆகிய இடஙக்ளில் தலா 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
K.Sakthipriya
Krishi Jagran