ஆண்கள் மட்டும் பங்கேற்கும், ராஜபாளையம் தேவதானம் வனப்பேச்சி அம்மன் கோவில் குருபூஜை விழாவில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தேவதானம் அடுத்த முகவூர் தெற்கு தெரு ஹிந்து நாடார் சமூகம் சார்பில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வனப்பேச்சி அம்மனுக்கு வழிபாடு நடப்பது வழக்கம். இதில் முகவூர் தெற்கு, கீழூர், வடக்கு தெருவைச் சேர்ந்த தலைக்கட்டுதாரர்கள் வரி கொடுத்து பங்கேற்பர்.
அதிசய திருவிழா (Amazing Festival)
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு துவங்கி, சம்பந்தப்பட்ட ஊர் பகுதியில், இரவில் யாருக்கும் அனுமதி மறுக்கப்பட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. வீட்டிலிருந்து வெளியேறிய ஆண்கள் வனப்பேச்சி அம்மன் கோவில் வளாகத்தில் கூடி, நள்ளிரவு பூஜை பணிகளை துவங்கினர். மற்ற சமூக உறுப்பினர்கள் எந்த பாகுபாடுமின்றி, சைவ உணவு தயார் செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.
36 மூட்டை அரிசியில் உணவு சமைத்து அம்பாரமாக குவித்தனர். நேற்று காலை பூஜைகள் முடிந்து, பந்தியில் அமர்ந்து சாப்பிட்டு, பிரசாதத்துடன் வீடு திரும்பினர். இதில், 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.அதுவரை குடியிருப்பு பகுதியில் எந்த ஆண்களுக்கும் நுழைய அனுமதியில்லாததுடன், பெண்கள் ஊர் கட்டுப்பாட்டின் படி தடுப்பு வேலி அமைத்து இருந்தனர்.
காவல் தெய்வம் (God)
வேட்டை, விவசாய சமூகமாக இருந்த காலத்தில், காவல் தெய்வமாக இருந்த வனப்பேச்சி அம்மன் வழிபாடு பல நூற்றாண்டுகளாக தொடர்கிறது. 10 ஆயிரம் பேர் கூடிய இவ்விழாவில், வாலிபர் முதல் அனைத்து ஆண்களும் பங்கேற்றனர். அதே நேரம் வீடுகளில் பெண்கள் வழிபாடு நடத்தினர். மொபைல் போன், கேமரா உள்ளிட்ட வெளியுலக தொடர்புகள் இன்றி தடுப்புகள் அமைத்து, பெண்கள் விழாவை நிறைவு செய்தனர்.
மேலும் படிக்க
தமிழுக்கு முக்கியத்துவம்: அமெரிக்காவில் உதயமானது வள்ளுவர் தெரு!