மூத்த குடிமக்களுக்கு ஏசி ரயிலில் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பஞ்சாப்பில் காங்கிரசை வீழ்த்தி ஆம் ஆத்மி அரசு ஆட்சியை பிடித்தது. இதையடுத்து மின் கட்டண சலுகை, வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
குஜராத்தில் முதல்-மந்திரி புபேந்திர பட்டேல் தலைமையிலான பிஜேபி ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சி குஜராத்தில் பல வருடங்களாக ஆட்சியில் நீடித்து வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டின் இறுதியில் சட்டசபைத் தேர்தலை குஜராத் சந்திக்கிறது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால் ராஜ்கோட் நகரில் பேரணி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 60 வயது மேற்பட்டோருக்கு அயோத்தி உள்பட பல்வேறு புனித தலங்களுக்கு ஏசி ரயில்களில் இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இலவச மின்சாரம், தரம் நிறைந்த பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு டெல்லி முதலமைச்சர் தெரிவித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு முதியோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.