ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் இது எல்லா மாநில ஊழியர்களுக்கும் கிடையாது என்பதை நினைவில் கொள்க.
நிதி அமைச்சகம் சார்பில் ஆகஸ்ட் 14, 2023 தேதியிட்ட செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் பின்வருமாறு- "ஓணம்' மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கருத்தில் கொண்டு, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம்/ஊதியம்/ஓய்வூதியத்தை முன் கூட்டியே வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி பின்வரும் தேதியில் ஊதியம்/சம்பளம்/ஓய்வூதியம் வழங்கப்படும். (i) கேரளா: 25- 08-2023 (வெள்ளிக்கிழமை); (ii) மகாராஷ்டிரா: 27-09-2023 (புதன்கிழமை)
ஓணத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 25, 2023 அன்று கேரளாவில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் தங்களது ஆகஸ்ட் மாத சம்பளத்தை பெறலாம். கேரளாவில் உள்ள அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் குறிப்பிட்ட தேதியில் வங்கிகள்/பிஏஓக்கள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்கள் ஆகஸ்ட் மாத சம்பளத்தை பெற செப்-1 வரை காத்திருக்கத் தேவையில்லை.
இதேப்போல் மகாராஷ்டிராவில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் செப்டம்பர் மாதத்திற்கான சம்பளத்தை செப்டம்பர் 27, 2023 அன்று பெறலாம். மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த தேதியில் வங்கிகள்/பிஏஓக்கள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிரா மாநில மத்திய அரசு ஊழியர்கள் செப்டம்பர் மாத சம்பளத்தை பெற அக்டோபர் 1 வரை காத்திருக்கத் தேவையில்லை.
கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பணியாற்றும் மத்திய அரசு தொழில்துறை ஊழியர்களின் ஊதியமும் மேலே கொடுக்கப்பட்ட தேதிகளின்படி முன்கூட்டியே வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் மேலும் கூறியது.
மேலும், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது முன்பணமாக கருதப்படும் என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் ஒவ்வொரு ஊழியர்/ஓய்வூதியம் பெறுபவரின் முழு மாதச் சம்பளம்/ஊதியம்/ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்ட பிறகு சரிசெய்தலுக்கு உட்பட்டது எனவும் தனது அறிவிப்பாணையில் குறிப்பிட்டுள்ளது.
நிதி அமைச்சகத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகள் இந்த அறிவுறுத்தல்களை உடனடியாக தேவையான நடவடிக்கைக்காக கேரளா / மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள தங்கள் அலுவலகங்களின் கவனத்திற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரள அரசு ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாநில அரசு ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் போனஸாக அறிவித்துள்ளது. போனஸுக்கு தகுதியில்லாத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விழா உதவித்தொகையாக 2,750 ரூபாய் வழங்கப்படும் என்று மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசுத் துறையில் பணிபுரியும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சிறப்பு உதவி மற்றும் சலுகைகள் சென்றடையும் என்று கேரள நிதியமைச்சர் கே என் பாலகோபால் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
ஆட்டம் காணும் உள்ளூர் சந்தை- வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி!