மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைப்பதற்கு மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை மனநலம் பாதிக்கப்பட்டக் குழந்தைகளை வைத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு பென்சன் தொடர்பான ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. குடும்ப ஓய்வூதியம் தொடர்பான புதிய விதியை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, இறந்துபோன அரசு ஊழியர்களின் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் குடும்ப ஓய்வூதிய பலன் கிடைக்கும். அதாவது, மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் உண்டு என்பதை அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குடும்ப ஓய்வூதியம் கிடைக்காததால் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்தக் குழந்தைகள் மற்றவர்களைச் சார்ந்தே இருக்க வேண்டியக் கட்டாயச் சூழல் இருக்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
சான்றிதழ் தேவையில்லை
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இதுகுறித்துக் கூறுகையில்:-
இதுபோன்ற மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வங்கிகள் ஓய்வூதியம் வழங்க மறுக்கின்றன. இந்த குழந்தைகளிடம் இருந்து நீதிமன்றத்தால் வழங்கப்படும் பாதுகாவலர் சான்றிதழை வங்கிகள் கேட்கின்றன. நரேந்திர மோடி தலைமையிலான அரசு சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்க முயற்சித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் மக்களுக்கு உதவும் வகையில், ஊழியர்களின் குழந்தைகள் தங்கு தடையின்றி ஓய்வூதியம் பெறும் வகையில், குடும்ப ஓய்வூதியத்தில் நியமனம் வழங்குவது அவசியம்.
சான்றிதழ் இல்லாவிட்டாலும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் . நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பாதுகாவலர் சான்றிதழ் இல்லாமல் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வங்கிகள் மறுத்தால், அது மத்திய அரசுப் பணி (ஓய்வூதியம்) விதிகள், 2021இன் சட்ட விதிகளை மீறுவதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசு அறிவுறுத்தல்
இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஓய்வூதியம் வழங்கும் அனைத்து வங்கிகளின் நிர்வாக இயக்குநர்களுக்கும் அரசு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் குடும்ப ஓய்வூதியத்தின் பலனைப் பெறுவதை உறுதிசெய்ய, அவர்களின் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியச் செயலாக்க மையம், ஓய்வூதியம் செலுத்தும் கிளை ஆகியவற்றுக்கு அறிவுறுத்துமாறு இயக்குநர்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க...