'ஆன்லைன்' வாயிலாக திருமணம் நடத்தி, 'ஸொமாட்டோ' வாயிலாக வீட்டுக்கே கல்யாண சாப்பாடு 'டெலிவரி' செய்யும் புதிய திருமண நடைமுறைக்கு இன்றைய இளைஞர்கள் மாறத் துவங்கி உள்ளனர்.
'ஒமைக்ரான்' வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக, உலகம் முழுதும் பல்வேறு நாடுகளிலும் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நம் நாட்டிலும் மாநிலங்களின் நிலைக்கு ஏற்ப பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் எத்தனை பேர் கலந்து கொள்ளலாம் என்பதை மாநில அரசுகள் நிர்ணயித்துள்ளன.
ஆன்லைனில் திருமணம் (Wedding in Online)
'மேற்கு வங்கத்தில் திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது' என, மாநில அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில் கோல்கட்டாவைச் சேர்ந்த சந்தீபன் சர்க்கார் - அதிதி தாஸ் ஜோடி வரும் 24ல் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். மாப்பிள்ளை சந்தீபன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் குணமடைந்து வீடு திரும்பிய பின், தன் திருமண நிகழ்ச்சியை கூட்டம் சேர்க்காமல் விமரிசையாக நடத்த முடிவு செய்தார். அப்போது புதிய யோசனை பிறந்துள்ளது.
அதன்படி திருமணத்துக்கு 100 - 120 பேரை மட்டுமே நேரில் அழைக்க திட்டமிட்டார். மேலும் 300 பேர், 'கூகுள் மீட்' செயலி வாயிலாக திருமணத்தை ஆன்லைனில் காண ஏற்பாடு செய்துஉள்ளார். இதில் பங்கேற்கும் விருந்தினர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஸொமாட்டோ உணவு வினியோக சேவை அளிக்கும் செயலி வாயிலாக வீட்டுக்கே கல்யாண சாப்பாடு டெலிவரி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் விருந்து (Online Feast)
தற்போதைய சூழலில் கூட்டம் சேராத இது போன்ற திருமணங்களை ஆதரிக்க வேண்டும் என்பதால், இந்த திருமண பணிகளுக்காக தனி குழுவை நியமித்துள்ளதாக ஸொமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் - ஜனகநந்தினி ஜோடியும் அடுத்த மாதம் நடக்கவுள்ள தங்கள் திருமண வரவேற்பை, 'ஆன்லைன்' வாயிலாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் படிக்க