தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், ஆன்லைன் மூலம் 10 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை நடத்தலாமா? என்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரத்தில், பள்ளிப் பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யும் போது டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் கல்வி வழங்குவதை கருத்தில் கொண்டு மாற்றங்கள் செய்யப்படும் என, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி உள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் யங் இந்தியன்சின் 2022 ஆம் ஆண்டு இளம் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே". ஆகையால், இரண்டாவது அன்னையாக விளங்கக் கூடிய ஆசிரியர்கள் தான் மாணவர்களை திருத்த வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.கொரோனா காலத்தில் ஆசிரியர்களை இரண்டாம் அன்னையாக பார்ப்பதாகவும், ஆனால், ஆசிரியரிடம் பள்ளி மாணவர்கள் தவறான முறைகளில் நடந்து கொள்வது, பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக மட்டுமல்லாமல், இரு குழந்தைகளின் தந்தையாகவும் மன வேதனையை ஏற்படுத்துகிறது.கொரோனா காலத்திற்கு பிறகு பள்ளி மாணவர்களிடம் மன ரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அதை சரி செய்வது எங்களின் கடமை.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொதுத்தேர்வை நடத்துவது குறித்து முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.கொரோனா காலத்திற்கு பிறகு பள்ளி மாணவர்களிடம் மனரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யும் போது டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் கல்வி வழங்குவதை கருத்தில் கொண்டு மாற்றங்கள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் கருத்தில்கொண்டு, பொதுத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாமா என்பது குறித்து அரசு தரப்பில் ஒருபுறம் பரிசீலனை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க...
ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு- கல்வித்தகுதி 8ம் வகுப்பு!