உலக அளவில் தென்னை நார் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இது உலக உற்பத்தியில் 90%- க்கும் அதிகமாக உள்ளது. ஆனால் அதே சமயம் அதிகரித்து வரும் செயற்கை இழைகளின் பயன்பாட்டினால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் தென்னை நார் தொழில், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகிறது, மில்லியன் கணக்கான மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது.
தேங்காயின் உமியிலிருந்து பெறப்படும் நார்களை கொண்டு பாய்கள், விரிப்புகள், கயிறுகள், தூரிகைகள், உரங்கள் தயாரிக்கக்கூட பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தென்னை நார்களை பதப்படுத்தி பல்வேறு தென்னை நார் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் ஏராளமான தென்னை நார் உற்பத்தி அலகுகள் மாநிலத்தில் உள்ளன.
கோவை, பொள்ளாச்சி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி போன்ற தென்னை நார் வளமான பகுதிகளில் இந்த அலகுகள் பெரும்பாலும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களாகும். இவ்வளவு சிறப்பம்சங்கள், வேலை வாய்ப்புகள் இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் செயற்கை இழைகளின் பயன்பாடு தென்னை நார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பாலிப்ரோப்பிலீன் போன்ற செயற்கை இழைகள் (Synthetic fiber) தென்னை நார்க்கு மாற்றாக அதிகளவில் சந்தையில் விற்பனையாகி வருகின்றன. தென்னை நார்களை விட செயற்கை இழைகள் பெரும்பாலும் மலிவானவை மற்றும் உற்பத்தி செய்யவும் எளிதானவை. இதனால் தொழில் முனைவோர்களும் செயற்கை இழை மூலம் பொருட்கள் தயாரிக்கவே ஆர்வம் காட்டி வருகின்றனர்.
செயற்கை இழைகளின் போட்டி அதிகரித்து வருவதால், சமீப ஆண்டுகளில் தேங்காய் விலை குறைந்து வருகிறது. இதனால் தென்னை நார் உற்பத்தியாளர்கள் லாபம் ஈட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், தொழிலில் வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென்னை நார் தொழில்துறையின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. ஆனால் அதே வேளையில், சுற்றுச்சூழல் நன்மைக்காக பெரும்பாலான அயல் நாடுகளில் இன்றளவும் தென்னை நார் உற்பத்தி பொருட்களுக்கு மவுசு இருக்கத்தான் செய்கிறது. சிறு, குறு தென்னை நார் உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் கடனை அணுகுவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதனால் அவர்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களில் முதலீடு செய்வது கடினமாகிறது. இது பெரிய நிறுவனங்களுடன் போட்டியிடுவதை மேலும் கடினமாக்குகிறது.
தென்னை நார் பொருட்களை உற்பத்தி செய்வதில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. மேலும் தென்னை நார் பயன்பாடு குறித்த விழிப்புணர்வினை வழங்கி சந்தைகளில் விற்பனையினை அதிகரிப்பது போன்ற பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இத்துறைக்கும் ஏற்பட்டுள்ளது.
ஒன்றிய, மாநில அரசுகள் தென்னை நார் உற்பத்தியாளர்களுக்கு சலுகைகள், மானியங்கள் வழங்குவது போன்ற நடவடிக்கையின் மூலம் இத்துறை மீண்டும் உயிர்த்தெழும் என பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.
pic courtesy: unsplash
மேலும் காண்க:
நடப்பாண்டு 1,72,270 ஹெக்டர் சாகுபடி செய்ய இலக்கு- உரம் இருப்பு குறித்து ஆட்சியர் தகவல்