தெலுங்கானாவில் உள்ள, 'தக் ஷின் - 5' என்ற உணவகத்தின் ஊழியர்களிடம் கனிவாக பேசும் வாடிக்கையாளர்களுக்கு, உணவு கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கும் புதிய திட்டத்துக்கு, வரவேற்பு அதிகரித்துள்ளது. தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஐதராபாதில் உள்ள காஜாகுடா என்ற இடத்தில், 'தக் ஷின் - 5' என்ற உணவகம் உள்ளது.
உணவகம் (Hotel)
ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களின் பாரம்பரிய உணவு வகைகள், இங்கு பரிமாறப்படுகின்றன. இங்கு, ஒரு சைவ சாப்பாடுக்கு, வரிகள் இன்றி, 165 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் உணவு, 'ஆர்டர்' செய்யும் போது, 'ஒரு சைவ சாப்பாடு ப்ளீஸ்' என பணிவாக கேட்டால், உணவு கட்டணம் 150 ரூபாயாக குறைக்கப்படுகிறது.
ஊழியர்களுடனான தொடர் உரையாடலின் போது, 'நன்றி, இந்த நாள் இனிய நாளாகட்டும்' என்பது போன்ற கனிவான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு, கட்டணத்தில் கூடுதல் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இந்த அவசர யுகத்தில், சக மனிதர்களுடன் கனிவாக பேசும் பழக்கத்தை ஊக்குவிக்கும் இந்த முயற்சிக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில், மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும், மூத்த குடிமக்களுடன் வரும் போது, முதியவரின் வயதுக்கு ஏற்ப தள்ளுபடி அளிக்கப்படுவதாகவும், வாடிக்கையாளர்கள் பலர் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
உணவு பொருட்கள் தரமற்றதாக இருந்தால் புகார் அளிக்க வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்!