அந்நியன் படத்தில் வருகிற மாதிரி, ஒரே ஆளுக்கு மன எழுச்சியும், மன சோர்வும் அடுத்தடுத்து வருவது தான், இருதுருவ மனநோய். இது உலகளவில், 8 கோடி பேருக்கு இருப்பதாகவும், சிகிச்சை எடுக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும், எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். உடல் ஆரோக்கியத்திற்கு இணையாக, மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். ஆனால், மனம் சார்ந்த நோய்களுக்கு, ஆரம்ப நிலையிலே சிகிச்சை எடுத்துக்கொள்ள, வருவோரின் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது.
மனநோய் (Stress)
'மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால், உலகில் எட்டுக்கோடி பேருக்கு இருதுருவ மனநோய் உள்ளது. இந்த நோயின் அறிகுறியை, 15 வயது முதலே கண்டறியலாம். சிகிச்சையும், மனநல பயிற்சிகளும் மட்டுமே, இந்நோய்க்கு தீர்வாக இருப்பதால், அலட்சியம் காட்டினால், உயிருக்கு ஆபத்தில் முடியலாம்' என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
பைபோலார் எனும் இருதுருவ மனநோய் தினம், கடந்த மாதம் 30ம் தேதி, நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.
இதுசார்ந்து, மனநல மருத்துவர் சீனிவாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: இருதுருவ மனநோய் என்றால், மனம் இருவிதமான எழுச்சிகளுக்கு ஆட்படுவது. குறிப்பாக, அதீத மன எழுச்சியில் இருந்தால், 'ஹைப்பர்' ஆக நடந்து கொள்வர். எதிலும், அதிக துடிப்புடன், வழக்கமான மனநிலையை விட மாறுபட்டிருக்கும். இவர்களுக்கு துாக்கமே இருக்காது. மூன்று நாட்கள் வரை கூட துாங்காமல், எதையோ பேசிக்கொண்டும், செய்துகொண்டும் இருப்பார்கள்.
இந்த உலகத்தை தானே வழிநடத்துவது போன்ற மாயையில் பிதற்றுவார்கள். எளிதில் பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கி கொள்வர். அதே நபர், சில தினங்களுக்கு பிறகு, சாதாரண மனநிலைக்கு மாறிவிடுவர்.
பின் சிறிது காலத்திலேயே, மனசோர்வுக்குள் தள்ளப்பட்டு, எந்த நம்பிக்கையும் இல்லாதது போல காட்சியளிப்பர். எளிதில் உணர்ச்சிவசப்படுதல், மன அழுத்தத்தில் இருப்பது, தன்னையே தாழ்வாக கருதி கொள்வது போன்ற, மனநிலைக்கு வந்து விடுவர்.
இச்சமயத்தில், தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கும். இதுபோன்ற அறிகுறிகள் இருப்பது அறிந்தால், உடனடியாக மனநல மருத்துவரை அணுகுவது அவசியம். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது சிகிச்சை அளித்தால்தான், இயல்பு மனநிலைக்கு மாற்ற முடியும்.
மூளையில் ஏற்பட்டுள்ள ரசாயன மாற்றங்களை சரிசெய்ய, மருந்துகள் உள்ளன. தொடர் மனநல பயிற்சி மூலம், வழக்கமான வாழ்வியலுக்கு மாற்றி விடலாம். இதற்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் தேவை.
மேலும் படிக்க
சீமைக்கருவேல மரங்களை அகற்ற இறுதி கொள்கை முடிவு: சென்னை உயர்நீதிமன்றம்!