Others

Monday, 04 December 2023 04:10 PM , by: Muthukrishnan Murugan

Floods in chennai

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. ஏற்கெனவே இன்றைய தினமும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையை புரட்டிப்போட்ட கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிக்ஜாம் புயல் நாளை கரையை கடக்கும் நிலையில் சென்னை, திருவள்லூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களிலும், அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவிப்பு செல்லுபடியாகும்.

வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால், குடிநீர், மின் விநியோகம், உணவகங்கள், போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயலின் திசை எவ்வாறு உள்ளது, இதனால் கனமழை பெய்யும் பகுதிகளின் விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-

நேற்று (03-12-2023) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிக்ஜாம் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (04-12-2023) காலை 08:30 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா-வடதமிழக கடலோரப்பகுதிகளில் வலுப்பெற்று தீவிர புயலாக சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 90 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு வடகிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12-2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே பாபட்லாவிற்கு அருகே தீவிர புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை நிலைக்குலைந்த சென்னை

04.12.2023; தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

05.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தரைக்காற்று எச்சரிக்கை: (04.12.2023) திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் வானிலை தொடர்பான மற்றும் புயல் நிலை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Mausam.imd.gov.in/Chennai என்கிற இணையதளத்தை காணவும்.

இதையும் காண்க:

நெல்லூர் நோக்கி நகரும் மிக்ஜாம் புயல்- சென்னையில் மழை குறையுமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)