பண்ருட்டி அருகே திருமண வரவேற்பு விழாவில் மணமகன் கன்னத்தில் அறைந்ததால் ஆத்திரமடைந்த மணப்பெண் அந்தத் திருமணத்தை நிறுத்தினார். இதையடுத்து உறவுக்கார வாலிபர் திடீர் மாப்பிள்ளையாக தேர்வு செய்யப்பட்டு, மணப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்
மரியாதை முக்கியம்
நாம் படித்த படிப்பும், செய்கின்ற வேலையும், சமுதாயத்தில் நமக்கென ஒரு மரியாதையைப் பெற்றுக்கொடுக்கிறது. அதைத் தக்கவைத்துக்கொள்ள நாமும் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும். அப்படி நடந்துகொள்ளாத நிலையில், சில தர்மசங்கடங்களைச் சந்தித்தே ஆக வேண்டும் என்பதுதான் விதி. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்தது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த எம்.எஸ்சி பட்டதாரியான இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்தனர்.திருமணம் காடாம்புலியூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற இருந்தது.
திருமண வரவேற்பு (Wedding reception)
முன்தினம் இரவு திருமண வரவேற்பு விழா காடாம்புலியூர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இருதரப்பையும் சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் மணமக்களுக்கு பரிசளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். விருந்து உபசாரமும் தடல்புடலாக நடைபெற்றது.
திருமண வரவேற்பு விழாவில் இசைக் கச்சேரியும் நடந்தது.
ஜோடி நடனம்
இதில் மணமக்கள் இருவரும் ஜோடியாக ஒரு பாடலுக்கு நடனம் ஆடினர். அந்த சமயத்தில் மணமகளின் சகோதரர் உறவுமுறை கொண்ட வாலிபர் ஒருவரும் அங்கு வந்து நடனம் ஆடினார். இது மணமகனுக்கு பிடிக்கவில்லை.
கண்ணத்தில் அறை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், திடீரென ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மணமகளின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்துவிட்டார். இதை அங்கிருந்தவர்கள் யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அதிர்ச்சியடைந்த மணப்பெண் தடாலடியாக ஒரு முடிவு எடுத்தார். என்ன செய்தார் தெரியுமா? எதைப்பற்றியும் யோசிக்காமல், அனைத்து சொந்தங்கள் முன்னிலையில் மேடையில் தன்னை கன்னத்தில் ஓங்கி அறைந்த சாப்ட்வேர் என்ஜினீயரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று அறிவித்தார். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த மணமகன், தான் செய்தது தவறு என்று கூறி மணமகள் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
இருப்பினும் பெண்வீட்டார் சமாதானம் ஆகவில்லை. திருமணத்திற்கு கொண்டுவந்த சீர்வரிசை பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு, மணமகளை காரில் பண்ருட்டிக்கு அழைத்து சென்றனர்.
மணமகனை மாற்றித் திருமணம் (Marriage by changing the groom)
இரவோடு இரவாக கூடிப்பேசி செஞ்சி அருகில் உள்ள உறவினர் ஒருவரை மணமகனாக தேர்வு செய்தனர். இவர் பிளஸ்-2 வரை படித்துள்ளார்.
பின்னர் மறுநாள் காலை திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வைத்து மணப்பெண்ணுக்கும் திடீர் மாப்பிள்ளைக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க...