வடதமிழக கடலோரப்பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்த நிலையில், இன்று 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
இதுத்தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை மற்றும் முன்னறிவிப்பு குறித்த தகவல்களையும் வழங்கியுள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
27.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
28.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29.06.2023 மகல் 02.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கடல் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25.26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
பூண்டி (திருவள்ளூர்) 9, பொன்னை அணை (வேலூர்) 7, ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை) தலா 6, சோழவரம் (திருவள்ளூர்) பணப்பாக்கம் (ராணிப்பேட்டை) பள்ளிப்பட்டு (இருவள்ளூர்), அம்மூர் (ராணிப்பேட்டை), திருத்தணி, (திருவள்ளூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), காஞ்சிபுரம், வளசரவாக்கம் (சென்னை), மணலி (சென்னை) பகுதியில் தலா 5 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
அதேப்போல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக பாளையங்கோட்டை பகுதியில் 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தர்மபுரி மற்றும் கரூர் மாவட்டங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக (5.1 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு அதிகம்) வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (அடுத்த 7 நாட்கள்): ஏதுமில்லை
மேலும் வானிலை தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Mausam.imd.gov.in/Chennai என்கிற இணையதளத்தில் காணலாம் எனவும் சென்னை வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க: