எல்லா வகையான தேவைகளுக்கும் ‘டாப் அப்’ கடன் பொருந்தும் என்றாலும், இந்த வசதியை சரியாக பயன்படுத்திக் கொள்வது அவசியம். நிதி தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தனிநபர் கடன், தங்க நகைக் கடன், ‘கிரெடிட் கார்டு’ கடன் என பலவிதமான வாய்ப்புகள் இருப்பது போல, டாப் அப் கடன் (Topup loan) வசதியும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. ஏற்கனவே உள்ள கடன் மீது வழங்கப்படும் கூடுதல் கடனாக அமையும் இந்த வசதி, பொதுவாக வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. எதிர்பாராத மற்றும் அவசர நிதி தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மற்ற வகை கடன்களை விட, டாப் அப் கடன் ஏற்றதாக கருதப்படுகிறது. எனினும், இந்த கடன் வசதியை எப்போது, எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என அறிந்து கொள்வது அவசியம்.
எளிய வசதி
டாப் அப் கடன் வசதியை பயன்படுத்த தீர்மானிப்பதற்கு முன், இந்த வசதியின் தன்மை பற்றி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் ஏற்கனவே வீட்டுக் கடன் (Home Loan) பெற்றவர்களில், தகுதி வாய்ந்தவர்களுக்கு கூடுதல் கடன் தொகையாக டாப் அப் கடன் வழங்கப்படுகிறது. கடன் பெற்றவர் பணத்தை திருப்பிச் செலுத்தி வரும் தன்மை, இதற்கான முக்கிய அம்சமாக அமைகிறது. குறைந்தபட்சம் ஓராண்டு காலத்திற்காவது கடன் தவணையை மாதந்தோறும் தவறாமல் செலுத்தி வருபவர்களே, இதற்கு தகுதி உடையவர்களாக கருதப்படுகின்றனர்.
பொதுவாக வங்கிகள், சொத்து மதிப்பில் 80 சதவீதம் வரை கடன் வழங்குகின்றன. ஆனால், எல்லாரும் இந்த அளவு வரை கடன் பெறுவதில்லை. எனவே, மிச்சமுள்ள தொகையை எதிர்காலத்தில் கடனாக பெறலாம். அதே போல, ஏற்கனவே செலுத்திய கடன் தொகையையும் கடனாக பெறலாம். இந்த தொகையை வங்கிகள், வீட்டுக் கடன் பெற்றவர்கள் கூடுதல் கடனாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை அளிக்கின்றன. பெரும்பாலும் ஏற்கனவே உள்ள கடன் நிபந்தனைகள் மற்றும் விதிகளுக்கு ஏற்ப இந்த வசதியை பெறலாம்.
வாழ்நாள் முழுவதும் பென்சன் தரும் LIC-யின் சூப்பர் பாலிசி!
சாதகம் என்ன?
வீட்டுக் கடன் வசதியை சொந்த வீடு வாங்க மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், வீட்டுக் கடன் மீதான டாப் அப் கடனை எதற்காக வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வீட்டின் வசதியை மேம்படுத்திக் கொள்ள அல்லது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது தனிநபர் கடன் போல எந்த தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் கடன் தொகையாக வழங்கப்படுவதால், இதற்கான செயல் முறையும் எளிதாகவே இருக்கும். கடன் தொகையும் உடனடியாக வழங்கப்படும் வாய்ப்புள்ளது.
மேலும், கூடுதல் தொகைக்கு ஏற்ப கூடுதல் காலத்திற்கு மாத தவணையை செலுத்த வேண்டியிருக்கும்.புதிதாக கடனுக்கு விண்ணப்பிக்காமல், ஏற்கனவே உள்ள கடன் மீது கூடுதல் கடன் பெற வழி செய்வதும், இந்த கடனின் சிறப்பம்சமாக அமைகிறது. தனிநபர் கடன் போன்றவற்றுடன் ஒப்பிடும் போது, டாப் அப் கடன் ஏற்றதாக கருதப்படுகிறது. எனினும் எளிதாக கிடைக்கிறது என்பதற்காக, இந்த கடன் வசதியை விருப்பம் போல பயன்படுத்திக் கொள்வது, கடன் சுமையை அதிகரிக்கும்.
கடனுக்கான தேவை மற்றும் சூழலை மனதில் கொண்டே இந்த வசதியை நாடுவது ஏற்றதாக இருக்கும். மேலும், வீடு பராமரிப்பு அல்லது புதுப்பித்தல் பணிகளுக்கு இந்த தொகையை பயன்படுத்திக் கொள்ளும் போது மட்டுமே இதற்கான வரிச் சலுகை பொருந்தும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் விருப்பமா? இதோ பெஸ்ட் சாய்ஸ்!
அனைவருக்கும் பென்சன்: சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் சலுகைகள்!