வயதான காலத்தில் யாரையும் எதிர்ப்பாராமல் நிம்மதியாக வாழ்வதற்கு, இளம் வயதிலேயே முதலீட்டு திட்டத்தில் (Investment Plan) சேர்ந்து சேமிப்பது நல்ல பலனை அளிக்கும். வைப்பு நிதி முதலீட்டை தேர்வு செய்யும் போது, வட்டி விகித பலனை மட்டும் கருத்தில் கொள்ளாமல், மற்ற முக்கிய அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டும்.
அனைத்து வகையான முதலீட்டாளர்களாலும் பரவலாக நாடப்படும் முதலீடு வாய்ப்பாக வைப்பு நிதி இருந்தாலும், வைப்பு நிதியில் முதலீடு செய்யும் போது பல்வேறு அம்சங்களை மனதில் கொள்வது அவசியமாகும். தற்போதைய சூழலில் வங்கிகள், வைப்பு நிதி முதலீட்டிற்கு, 5.50 முதல் 6.50 சதவீதம் வட்டி (Interest) அளிக்கின்றன. வைப்பு நிதி முதலீட்டிற்கான கால அளவு குறைந்தபட்சமாக ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை அமைகின்றன. வைப்பு நிதி முதலீடு பொதுவாக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. வைப்பு நிதிகளுக்கான நிபந்தனைகள் மற்றும் முன்கூட்டியே விலக்கிக் கொள்வதற்கான அபராதம் போன்றவை மாறுபடலாம்.
வட்டி விகிதம்
வைப்பு நிதி முதலீடு என்று வரும் போது, பெரும்பாலானோர் முதலில் கவனிப்பது வட்டி விகிதம் தான். வட்டி விகிதம் வைப்பு நிதி காலத்திற்கு ஏற்ப மாறுபடுவதோடு, வங்கிக்கு வங்கி வேறுபடலாம். மேலும், முதலீட்டாளர் வயதின் அடிப்படையிலும் வட்டி விகிதம் மாறுபடலாம். உதாரணமாக, மூத்த குடிமகன்களுக்கு வழக்கமான வட்டி விகிதத்தை விட கூடுதல் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. வட்டி விகிதம், வைப்பு நிதியின் மொத்த காலத்திற்கும் மாறுபடாமல் இருக்கும். முதிர்வு காலத்தில் மறு முதலீடு செய்யும் போது, அப்போதைய வட்டி விகிதம் அளிக்கப்படும்.
வட்டி விகித வருமானம்
வட்டி விகித வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கான வழியையும் கவனிக்க வேண்டும். மாதந்தோறும் அல்லது காலாண்டு அடிப்படையில் என குறிப்பிட்ட இடைவெளியில், வட்டி வருமானத்தை பெற்றுக் கொள்ளலாம் அல்லது இந்த வருமானத்தையும் சேர்த்து முதலீடு செய்து, முதிர்வு காலத்தில் கூட்டாக பெற்றுக் கொள்ளலாம். இந்த முறையில் அதிக பலன் பெறலாம். வைப்பு நிதி வருமானம் உடனடியாக தேவையில்லை எனில் இந்த முறையை நாடலாம்.
காப்பீடு அம்சம்
அதிக வட்டி விகிதம் அளிக்கும் வைப்பு நிதியை தேர்வு செய்வது பொருத்தமாக இருக்கும் என்றாலும், மற்ற அம்சங்களையும் கவனிக்க வேண்டும். வைப்பு நிதி முதலீட்டின் மீது கடன் (Loan) பெறும் வசதி அளிக்கப்படுகிறது. பொதுவாக வைப்பு நிதி தொகையில், 90 சதவீதம் வரை கடன் அளிக்கப்படலாம். எனினும், இது வங்கிகளிடையே மாறுபடலாம். இதே போல, அவசர தேவை எனில் வைப்பு நிதியை முன்னதாக விலக்கிக் கொள்ளும் தேவை ஏற்படலாம். இதற்கு அபராதமாக சிறிதளவு வட்டி பிடித்தம் செய்யப்படலாம்.
சில வங்கிகள் அபராதம் இன்றி இந்த வசதியை அளித்தாலும், மற்ற நிபந்தனைகள் இருக்கலாம். வங்கி வைப்பு நிதி முதலீட்டிற்கு காப்பீடு (Insurance) பாதுகாப்பும் இருக்கிறது. இந்த காப்பீடு, 5 லட்சம் ரூபாய் வரையான தொகைக்கு பொருந்தும். பொதுவாக, வலுவாக உள்ள வங்கிகளில் வைப்பு நிதி முதலீடு செய்வது நல்லது. தற்போது, வைப்பு நிதி காப்பீட்டிற்கான பிரீமியம் தொகையை இதற்கான கார்ப்பரேஷன், வங்கிகளின் இடர் தன்மைக்கேற்ப அதிகரித்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி (RBI) கூறியுள்ளது.
இடர் மிகுந்த வங்கிகள் காப்பீட்டிற்கு அதிக பிரிமியம் செலுத்த வேண்டியிருக்கலாம். இந்த அம்சத்தையும் மனதில் கொள்ள வேண்டும். வங்கிகளின் நிர்வாகம் உள்ளிட்ட அம்சங்களோடு, ‘கிரெடிட் ரேட்டிங் (Credit Ranking) உள்ளிட்டவற்றையும் பரிசீலிப்பது நல்லது.
மேலும் படிக்க
கொரோனா வைரஸால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - பிரதமர் அறிவிப்பு