தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், புயலின் திசையும் தமிழகத்தை நோக்கி வருவதால் அடுத்த சில தினங்களுக்கு சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: நேற்று (30-11-2023) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (01-12-2023) காலை 05:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (01-12-2023) காலை 08:30 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 760 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 780 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 960 கிலோ மீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 940 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 02-12-2023 வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 03-12-2023 வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 மாலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் சென்னைக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கரையை கடக்கக்கூடும். இதனால் கனமழை பெய்யும் பகுதிகள் விவரம்-
01.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
02.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
03.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
04.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தரைக்காற்று எச்சரிக்கை:
03.12.2023: கடலூர், விழுப்புரம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
04.12.2023: விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும் வானிலைத் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள mausam.imd.gov.in/chennai என்கிற இணையதளத்தை காணவும்.
இதையும் காண்க:
பூந்தோட்ட மின் இணைப்புக்கு இலவச மின்சாரம்- விவசாயிகள் கோரிக்கை
சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 35 % ஊதிய உயர்வு