அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை இம்மாத இறுதிக்குள் பட்டுவாடா செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா நெருக்கடி காலத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமலேயே இருந்தது. பின்னர் கடந்த அக்டோபர் மாதம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 விழுக்காட்டில் இருந்து 31 விழுக்காடாக உயர்ந்துவிட்டது. எனினும், அகவிலைப்படி நிலுவைத் தொகை அரசு ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படாமலேயே உள்ளது. அகவிலைப்படி நிலுவைத் தொகைக்காக அரசு ஊழியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
ஒட்டுமொத்த அகவிலைப்படி நிலுவைத்தொகையும் ஒரே செட்டில்மெண்ட்டாக அரசு ஊழியர்களுக்கு செலுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு பட்டுவாடாக் குறித்த அடுத்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி நிலுவைத் தொகையை பொறுத்தவரை 18 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை மொத்தமாக செலுத்துவது குறித்து அரசுக்கும், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து அரசு தரப்பிடம் ஊழியர்கள் பிரதிநிதிகள் கோரிக்கை வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், அகவிலைப்படி நிலுவைத் தொகை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வால், 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
கொரோனாவால் அதிகரித்த ஆண்மைக் குறைபாடு பிரச்னை - ஆய்வில் தகவல்!