சமீபத்தில் சமூக ஊடகங்களில் யாருடைய குறுஞ்செய்தி உங்களை உற்சாகப்படுத்தும் என்ற கேள்வி வைரலாகிக் கொண்டிருந்தது. அதற்கு பலரும் 'சேலரி கிரெடிட்டட்' என்று வரும் செய்தி தான் என கிண்டலாக பதிலளித்தனர். அப்படி வரும் சம்பளம் இன்றைய விலைவாசி உயர்வால் அடுத்த சில நாட்களிலேயே கரைந்து காணாமல் போய்விடுகிறது. 50:30:20 என சம்பளத்தை பிரித்து பட்ஜெட் போட்டால் செலவுகளை நம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, எதிர்காலத்திற்கும் சேமித்து வைக்க முடியும். கடனில்லாதவர்களுக்கு தான் இம்முறை. கடன் இருப்பவர்கள் முதலில் அதனை விரைவாக முடிக்கும் வழிகளை கண்டறிய வேண்டும்.
50:30:20 பட்ஜெட் (50:30:20 Budjet)
இந்த 50:30:20 என்ற பட்ஜெட் முறை பணம் குறித்த ஆர்வம் கொண்டவர்களிடம் மிகவும் பிரபலமானது. இந்த முறை மூலம் ஒருவர் தனது வருமானத்தை வெற்றிகரமாகவும், எளிதாகவும் நிர்வகிக்க முடியும். அது என்ன 50:30:20 விகிதம் என்றால், எளிமையானது தான். நமது வருமானத்தை 3 வகையாக பிரித்துக்கொள்ள வேண்டும். மூன்று வகைகளில் எவற்றிற்கு எவ்வளவு பணம் ஒதுக்க வேண்டும் என்பது தான் இந்த விகிதாச்சாரம். 50% சம்பளத்தை அடிப்படை தேவைகளுக்கு ஒதுக்க வேண்டும், அதிகபட்சம் 30% வரையிலான சம்பளத்தை விருப்பமானவற்றை வாங்க ஒதுக்கலாம். 20% சம்பளத்தை சேமிப்பிற்கு அல்லது எதிர்கால திட்டங்களுக்கு ஒதுக்கலாம்.
50% தேவைகளுக்கு (50% for basic needs)
தவிர்க்க முடியாத செலவுகள் எல்லாம் அத்தியாவசிய தேவைகளில் வரும். இந்த தேவைகளுக்கு நமது வருமானத்தில் 50 சதவீத அளவே ஒதுக்கீடு செய்ய வேண்டும். 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறீர்கள் எனில் 15 ஆயிரத்திற்குள் வீட்டு வாடகை, மளிகை, மின்சார கட்டணம், அலைபேசி கட்டணம், பெட்ரோல், பைக் பராமரிப்பு ஆகியவை இருக்க வேண்டும். உங்கள் அடிப்படை தேவைகளுக்கு தற்போது ஆகும் செலவை கணக்கிடுங்கள். அவை உங்கள் சம்பளத்தை விட 50 சதவீதத்திற்கு மேல் ஆகிறது என்றால் நீங்கள் ஆடம்பரமாக செலவு செய்கிறீர்கள் என பொருள். எங்கெங்கு செலவை குறைக்க முடியுமோ அங்கெல்லாம் கை வையுங்கள். அது தான் உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது.
30% ஆசைகளுக்கு (30% for desires)
ஆசைகள் வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவும், ஈடுபாட்டுடனும் மாற்ற உதவும். அதற்காக நாம் கொஞ்சம் பணத்தைச் செலவழிக்கலாம். அவைகளுக்காக உங்கள் சம்பளத்திலிருந்து 30% வரை செலவிடலாம். சுற்றுலா, சினிமா, பிடித்த உடைகள் வாங்குவது, விளையாட்டுப் பொருட்கள், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்டிவி என இது போன்றவை வாங்க சம்பளத்தில் 30% வரை செலவிடலாம். இவை எல்லாம் திட்டமிடக்கூடிய செலவுகள் என்பதால் மாதம் தோறும் சேமித்தும் இவற்றை பெறலாம். சம்பளம் ரூ.30 ஆயிரம் எனில் அதில் மாதம் ரூ.9,000 வரை இவைகளுக்கு ஒதுக்கலாம்.
20% எதிர்காலத்திற்கு (20% for Future Savings)
சம்பளம் வங்கிக் கணக்கிற்கு வந்த உடன் முதல் வேலையாக இதை செய்யுங்கள் 20% தொகையை, ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் ரூ.6 ஆயிரத்தை சேமிப்பிற்கு ஒதுக்கி விடுங்கள். அதன் பின்னர் மேற்கூறிய 2 செலவுகளை கவனியுங்கள். பலர் தனியார் வேலை, நிரந்தரம் இல்லாத வேலை சேமிப்பை தொடங்கினால் தொடர முடியுமா என்றெல்லாம் எண்ணக்கூடும். அப்படி எண்ணினால் கடைசி வரை ஒரு ரூபாய் கூட நிற்காது. ஆர்.டி., மியூட்சுவல் பண்ட் போன்றவற்றில் எப்போது வேண்டுமானாலும் சேமிப்பை தொடங்கி, நிறுத்திக்கொள்ளும் வசதி உள்ளது. எனவே இலக்கை நிர்ணயித்துக்கொண்டு சேமிப்பை கட்டுக்கோப்பாக தொடருங்கள்.
முன்னதாக 6 மாத செலவுகளுக்கான தொகையை அவசர நிதியாக வங்கி டெபாசிட்டில் வைத்திருங்கள். மாதம் வீட்டுச் செலவு 10 ஆயிரம் ரூபாய் எனில் 60 ஆயிரம் ரூபாய் கைவசம் இருப்பது நல்லது. தற்போது இல்லை என்றாலும் வரும் காலங்களில் அதனை உருவாக்கிக் வைத்துக்கொள்ளுங்கள். பணம் தருவது போன்ற நம்பிக்கையை மனிதர்கள் கூட சில சமயங்களில் தர மாட்டார்கள்.
மேலும் படிக்க
25,000 ரூபாய் முதலீட்டில் நண்பர்கள் தொடங்கிய சிறுதொழில்: இப்போது கோடியில் இலாபம்!
1,000 ரூபாய் முதல் 14 இலட்சம் வரை: அருமையான அஞ்சலகத் திட்டம்!