ராஜஸ்தானில் நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்த பாட்டிக்கு மருத்துவர்கள், கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடவுள் (God)
உடல் நலக்குறைவு என்று வந்துவிட்டால், நம் கண்களுக்கு மருத்துவர்கள்தான் கடவுளாகத் தெரிகின்றனர். அவர்களை நம்பியே நாம் இருக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிவிடுகிறது.
ஆனால் இத்தகையச் சூழலைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சிலர், மனசாட்சிக்கு இடம்கொடுக்காமல், காசுக்காக எதையும் செய்யத் துணிந்துவிடுகிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பான்வாரி தேவி. 70 வயது பாட்டியான இவர் நீண்ட நாட்களாக சளி மற்றும் நெஞ்சு வலித்தொல்லையால் அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, இவர் வசிக்கும் பகுதியில் ஜெய்ப்பூ்ர் ராஜாட் மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ முகாம் நடந்தது.
மருத்து முகாம் (Medical camp)
இதுதொடர்பான பிட்நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு அந்த ஊர் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. இதைப் பார்த்த பான்வாரிதேவி தன் சளிதொல்லைக்கு மருந்து வாங்க அந்த முகாமிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் அந்த அறுவைசிகிச்சைக்கு, அவர் பணம் எதுவும் கட்ட தேவையில்லை என கூறியுள்ளனர். இதை நம்பி பன்வாரிதேவியும் ஒப்புக்கொண்டார்.
அரசின் காப்பீடு திட்டம் (Government Insurance Scheme)
பின்னர் பன்வாரிதேவியிடம் சில இன்சூரன்ஸ் பேப்பர்களில் கையெழுத்து வாங்கப்பட்டது. அரசின் சிரஞ்சீவி இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பன்வாரிக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
அலட்சியம் (Indifference)
அன்று மாலையே பார்ஜெய்பூருக்கு பன்வாரியை கூட்டிச்சென்ற மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து அவரது கால் முட்டியில் பன்வாரிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். சளித்தொல்லை, நெஞ்சு வலிக்கு ஏன் கால் முட்டியில் பன்வாரிக்கு அறுவை சிகிச்சை செய்கிறீர்கள் என பன்வாரி கேட்ட போதும் மருத்துவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை.
விசாரணை (Investigation)
ஆனால் அவருக்கு அறுவைசிகிச்சையை முடித்து மருத்துவமனை நிர்வாகம் பணத்தையும் பெற்ற நிலையில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து ராஜஸ்தான் அரசு இந்த மருத்துவமனை நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் இதில் சம்மந்தப்பட்ட 3 மருத்துவர்களையும் உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் பன்வாரிதேவிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
பனிக்காலத்தில் டயட்டை கடைபிடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்!