உடலில் ஏதாவது ஒரு பிரச்னை என்றால் நாம் தேடிச் செல்வது மருத்துவர்களைத் தான்; இவர்களிடம் தான் எதையும் மறைக்காமல் உள்ளபடி முழு உண்மையையும் கூறுவோம். அதேவேளையில் குடும்ப டாக்டர்கள் என்றால் உரிமையுடன் உடல்நலம் குறித்து புகார் அளிப்பவர்களும் உள்ளனர். நேரம், காலம் ஏதுமின்றி மக்களின் உயிரை காப்பாற்றும் பணியை செய்வதால், கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுபவர்கள் டாக்டர்கள். இவர்களின் மருத்துவ சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 1ல் தேசிய டாக்டர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மருத்துவர்கள் தினம் (Doctors Day)
மருத்துவர்கள் தினம் உலகம் முழுவதும் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட சேவைத் தன்மை மற்றும் நிகழ்வை முன்னிட்டு, ஒருசில நாடுகளில் நாள் வேறுபடுகிறது. அதன்படி இந்தியாவில் கடந்த 1991ல் முதன் முதலில் டாக்டர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆண்டுதோறும் ஜூலை 1ல் கொண்டாடப்படுகிறது.
மேற்கு வங்கத்தின் 2வது முதல்வராக பதவி வகித்த டாக்டர் பி.சி.ராய் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை 1ல் தான். இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரராக மட்டுமின்றி சிறந்த டாக்டராகவும் சேவை புரிந்தார். மருத்துவம், அரசியல், கல்வி என பல்வேறு துறைகளில் முன்மாதிரியாக திகழந்த இவரின் சேவையை போற்றும் வகையில், ஜூலை 1ல் டாக்டர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மருத்துவம், அறிவியல் மற்றும் இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 'பி.சி.ராய் தேசிய விருது' வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தாக்கத்தின் போது டாக்டர்களின் சேவை அளவிட முடியாதது. டாக்டர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து, மனைவி, மகள் என குடும்பத்தினரைக் கூட நினைக்காமல், 24 மணி நேரமும் பணியாற்றி பல உயிர்களை காப்பாற்றியது அனைவரும் அறிந்ததுதான். அதில் ஒருசில டாக்டர்கள் இளம்வயதிலேயே தங்கள் உயிரை நீத்து தியாகம் செய்தது அளவிடமுடியாத இழப்பாகும்.
இந்தியாவில் இந்த ஆண்டு டாக்டர்கள் தினத்துக்கு 'முன்வரிசையில் உள்ள குடும்ப டாக்டர்கள்' என 'தீம்' குறிப்பிடப்பட்டுள்ளது. இது டாக்டர்களின் சேவை மனப்பான்மை, அவர்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
அதேவேளையில், எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிக்க வேண்டும்; அப்போது, கிராம மக்களுக்கும் தடையில்லாமல் மருத்துவ வசதி கிடைக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் படிக்க