ரிசர்வ் வங்கி, அதன் பணக்கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ‘ரெப்போ’ வட்டியில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை என அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான, ஆறு உறுப்பினர்களை கொண்ட பணக் கொள்கை குழுவின் கூட்டம், கடந்த 8ம் தேதியன்று துவங்கி, நேற்றுடன் முடிவடைந்தது.
வட்டியில் மாற்றமில்லை (No change in Interest)
பட்ஜெட்டுக்கு பின், முதன் முறையாக கூடிய இந்த கூட்டத்தின் முடிவில், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாறுதலும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, ரெப்போ வட்டிவிகிதம் 4 சதவீதமாக தொடர்கிறது.
முக்கிய அம்சங்கள்:
- ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவே தொடரும்
- தொடர்ந்து 10வது முறையாக, ரெப்போ வட்டிவிகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
- வங்கிகளின் டெபாசிட்களுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும், ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி விகிதம் 3.35 சதவீதமாக தொடரும்
- நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 9.2 சதவீதமாகவும்; அடுத்த நிதியாண்டில் 7.8 சதவீதமாகவும் இருக்கும்
- நடப்பு நிதியாண்டில் சில்லரை விலை பணவீக்கம் 5.3 சதவீதமாகவும்; அடுத்த நிதியாண்டில் 4.5 சதவீதமாகவும் இருக்கும்
- தற்போதைய நடப்பு கணக்கு பற்றாக்குறை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும்
- கொரோனா தொடர்பான சுகாதார மற்றும் மருத்துவ கட்டமைப்பு சேவைகளுக்கான, 50 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு கடன் திட்டம், மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்
‘இ – ருபீ’ (E-Rupee) டிஜிட்டல் வவுச்சருக்கான வரம்பு, 10 ஆயிரம் ரூபாயிலிருந்து, 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இ – ருபீ வசதி வாயிலாக, இணைய வழியில் முன்கூட்டியே பணம் செலுத்தி, ரசீதுகளை வாங்கிக் கொள்ளலாம். பின், பணம் செலுத்த வேண்டிய இடத்தில், ரசீது தொடர்பான விபரங்களை மட்டும் வழங்கினால் போதும்; பணம் பெறப்பட்டு விடும் இந்த ரசீதை பிறருக்கு பரிசாகவும் வழங்க முடியும். இப்போது வவுச்சருக்கான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது
அடுத்த பணக்கொள்கை குழு கூட்டம், ஏப்ரல் 6 – 8ம் தேதி வரை நடைபெறும்.
மேலும் படிக்க
TNPSC: மே மாதம் குரூப் - 1 தேர்வு நடத்த திட்டம்!
PF கணக்குகள் 2 பாகங்களாக பிரிப்பு: ஏப்ரல் முதல் புதிய மாற்றம்!