தமிழகத்தில் பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு, வாயிலாக அரசு ஊழியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர். இதனை ஏற்று, பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்படும் என, அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதிய பென்சன் திட்டம்
தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், சீருடைப் பணியாளர்களுக்கு 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை சுமார் 6 லட்சம் ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பலன்கள் இல்லை
மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வுக்கால பலன்கள் இத்திட்டத்தில் இல்லாததால் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த மேண்டுமென தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்கள் பலகட்டப் போராட்டங்கள் மூலமாக வலியுறுத்தி வருகின்றன.
தேர்தல் வாக்குறுதி
ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும் தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.அரசின் இந்நடவடிக்கை அரசு ஊழியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கையெழுத்து
பங்களிப்பு ஓய்வூதியச் சட்டத்தின்படி ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையில் இன்று வரையில் தமிழக அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. மேலும் இத்திட்டத்தில் சேருவது மாநில அரசுகளின் விருப்புரிமையைப் பொறுத்தது. சில மாநிலங்கள் ஏற்கனவே பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கோரிக்கை
எனவே தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி 6 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக முதல்வர் மனமிறங்கி வரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
கடிதம்
மேற்கூறிய கோரிக்கைகளைக் கடிதமாக எழுதி அரசு ஊழியர்கள் சார்பாக அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் மூலமாக முதல்வருக்கு அனுப்பி தங்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க...