பழைய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கு செயல்படுத்துவது குறித்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில், பழைய ஓய்வூதியத் திட்டம் விரைவில் அமலாகும் எனத் தெரிகிறது. இதனால், லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.
வெகுநாள் கோரிக்கை
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களும் மாநில அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர். இத்திட்டம் அமலுக்கு வந்தால் ஊழியர்களுக்கு அதிகப் பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரிசீலனை
ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த விஷயத்தில் தனது நிலைப்பாட்டிலேயே உறுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில், முதற்கட்டமாக ஊழியர்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, சில மாநில அரசுகள் இத்திட்டத்தை ஒவ்வொன்றாக செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.
துவக்க நடவடிக்கையாக ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு, சத்தீஸ்கர் மாநிலமும் இத்திட்டத்தை அறிவித்தது. இரண்டு மாநிலங்கள் மட்டுமே இப்போது பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறியுள்ள நிலையில், மற்ற மாநிலங்களும் ஒவ்வொன்றாக இத்திட்டத்துக்கு மாற வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் மத்திய அரசே இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் உறுதி
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால் அடுத்த கட்ட ஆலோசனையில் மத்திய அரசு ஈடுபடும். அதன் பின்னர் அதிவிரைவாக பழைய ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இத்தகவலை மத்திய ஓய்வூதியத் துறை இணையமைச்சரான ஜிதேந்திர சிங் உறுதிசெய்துள்ளார். சட்டத்துறையிடமிருந்து கருத்துகள் வந்தபிறகு அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஊழியர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். குறிப்பாகப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்கள் தரப்பில் பல ஆண்டு காலமாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு இத்திட்டத்தை அறிவித்தால் அரசு ஊழியர்கள் நிம்மதியடைவார்கள்.கூடுதல் பலனும் கிடைக்கும்.
மேலும் படிக்க...