கேரள மாநிலம் பாலக்காடு அருகே பஞ்சாயத்து தலைவரான இளம்பெண், மாலை வேளையில் டீக்கடையும் நடத்திவருவது மற்றவர்களுக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இல்லத்தரசி திடீரென அரசியல்வாதியானால் எப்படியிருக்கும். எல்லாம் தலைகீழாக மாறும் அல்லவா? ஆனால் இங்கு பாலக்காட்டைச் சேர்ந்த ஒரு பெண், பஞ்சாயத்துத் தலைவரான பிறகும், தங்கள் டீக்கடையிலும் வேலை செய்து, உழைப்பின் உன்னதத்தை மற்றவர்களுக்கு விளக்குகிறார்.
பஞ்சாயத்துத் தலைவர்
கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அனுஷா. 30 வயதான இந்த இளம்பெண், கடந்த 2020 ம் ஆண்டு கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நல்லேபள்ளி பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார்.
இதில் வெற்றி பெற்ற அனுஷா, நல்லேபள்ளி பஞ்சாயத்துக்குத் தலைவரானார்.
கவுன்சிலர் தேர்தலில் வெற்றிபெறும் முன்பு அனுஷாவின் கணவர் நிஷாந்த் அந்தப் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். மேலும் அவர் ஒரு தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்தார். இதனால் கணவர் வேலைக்கு சென்றதும் டீக்கடையை அனுஷா பார்த்துக்கொள்வார்.
மாலையில் டீக்கடை உரிமையாளர்
தேர்தலில் வெற்றி பெற்று அனுஷா பஞ்சாயத்து தலைவர் ஆனபோதிலும், அவர் டீக்கடை வேலையை நிறுத்தவில்லை. தினமும் காலையில் பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் செல்லும் அனுஷா அங்கு மாலை வரை வேலை செய்கிறார். ஊழியர்கள் அனைவரும் வேலை முடிந்து சென்றபின்பு நேராக டீக்கடைக்கு வந்துவிடுவார்.மாலை 5.30 மணி முதல் இரவு 8. 30 மணி வரை டீக் கடையில் வேலை பார்ப்பார்.
இந்த நேரத்தில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி கோரிக்கைகளுடன் வரும் பொது மக்களின் குறைகளையும் கேட்டறிவார். கடந்த ஓராண்டாக இவரது பணி சிறப்பாக இருப்பதாக அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். அனுஷாவிற்கு ஒரு மகளும் உள்ளார். குடும்பமாக இருந்தாலும் அரசியலை வேலையாகப் பார்க்காமல் பொதுமக்களுக்கு செய்யும் சேவையாக கருதுவதாக அனுஷா தெரிவித்தார்.
மேலும் படிக்க...