வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வருகிற 30 ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அநேக பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது.
இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று சேலம், தருமபுரி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், தேனி, திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை வெளுத்து வாங்கிய கனமழை
நேற்று காலை முதலே சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி, வடபழனி, கிண்டி, உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. காலை முதலே இடியுடன் பலத்த மழை பெய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் 11 மி.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 54 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இன்று அதிக பட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்ஸியஸ், குறைந்த பட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்ஸியஸ் பதிவாகக்கூடும்.
இடி தாக்கி மரணம்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. பேரத்தூர் கிராமத்தில் இடி தாக்கி அன்னப்பூரணி என்ற பெண் உயிர் இழந்தார். மேலும் காயம் அடைந்த ஐந்து பேர் திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவிடைமருதூர் சுற்று வட்டாரத்தில் பலத்த இடியுடன் மழை பெய்தது. இடி தாக்கிய அதிர்ச்சியில் 4 பெண்கள் மயக்கம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி சுற்று வட்டாரத்திலும், ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடி, நயினார்கோவில் உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர், தாராபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
K.Sakthipriya
Krishi Jagran