
நாட்டின் முக்கிய உயர் பொறுப்புகளில் ஒன்று ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பு. தற்போது ரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகாந்த தாஸ் உள்ளார். அவரது சம்பளம் மற்றும் துணை கவர்னர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் செயல்பாட்டையும் கண்காணிக்கும் மத்திய வங்கியாக ரிசர்வ் வங்கி உள்ளது.
ரிசர்வ் வங்கியின் தலைமை பொறுப்பில் கவர்னர் நியமிக்கப்படுவார். மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் அவர் பணியாற்றுவார். இந்தியாவின் நிதிக் கொள்கையை உருவாக்குதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பதில் ரிசர்வ் வங்கி கவர்னர் முக்கிய பங்கு வகிக்கிறார். மேலும் கிராமப்புற தொழில்கள், விவசாயம் மற்றும் குறு, சிறு தொழில்களுக்கு கடன் வழங்குவதை எளிதாக்குவது மற்றும் கண்காணிப்பது ஆகிய பணிகளை செய்கிறார்.
மாதச் சம்பளம் (Monthly Income)
தற்போது ரிசர்வ் வங்கி கவர்னராக உள்ள சக்திகாந்த தாஸ் கடந்த நிதியாண்டில் மாதம் ரூ.2.5 லட்சம் ஊதியம் பெற்றுள்ளார். இவருக்கு முன்பு 2018 டிசம்பர் வரை கவர்னராக இருந்த உர்ஜித் பட்டேலும் இதே ஊதியம் பெற்றுள்ளார். 4 ஆண்டுகளாகியும் சம்பளம் உயரவில்லை. அதே போல் தற்போது உள்ள 4 துணை கவர்னர்களான எம்.டி.பத்ரா, எம்.ராஜேஷ்வர் ராவ், எம்.கே.ஜெயின், டி. ரபி சங்கர் ஆகியோர் மாதம் ரூ.2.25 லட்சம் சம்பளம் பெற்றுள்ளனர். மேலும், ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர்களான அனில் குமார் ஷர்மா, சிரிஷ் சந்திர முர்மு, ஓம் பிரகாஷ் மால் மற்றும் மிருதுல் குமார் சாகர் உள்ளிட்டோர் மாதம் ரூ.2.16 லட்சம் ஊதியம் பெற்றுள்ளனர்.
இதே போல் பொதுத் துறை வங்கிகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் சம்பளமும் குறைந்த அளவே உள்ளது. எஸ்.பி.ஐ., சி.இ.ஓ., மாத சம்பளம் ரூ.3.19 லட்சம். பஞ்சாப் நேஷனல் வங்கி தவிர்த்து இதர டாப் 5 பொதுத் துறை வங்கி தலைமை அதிகாரிகளின் சம்பளமும் மாதம் ரூ.3.5 லட்சத்துக்குள் அடங்கும். இவர்களுடன் ஒப்பிடும் இந்தியாவின் டாப் 5 தனியார் வங்கியின் தலைமை அதிகாரிகளின் ஊதியம் இமலாய அளவிற்கு அதிகம் உள்ளது. மாதம் அவர்கள் ரூ.19 லட்சம் முதல் ரூ.59 லட்சம் வரை பெறுகின்றனர். உதாரணமாக எச்.டி.எப்.சி., சி.இ.ஓ.,வின் கடந்த நிதியாண்டின் சம்பளம் ரூ.19 கோடி ஆகும்.
மேலும் படிக்க
வந்த வேகத்திலேயே கரைகிறதா உங்கள் சம்பளம்? 50:30:20 முறையைப் பின்பற்றுங்கள்!