தனது காரை 17 லட்சம் கொடுத்து பழுதுபார்ப்பதற்குப் பதிலாக, 30 கிலோ வெடி மருந்தைப் பயன்படுத்தி வெடிக்க வைத்துள்ளார் அதன் உரிமையாளர்.
கார் கனவு (Car dream)
வாழ்க்கையில் எப்படியாவது, கார் வாங்கிக்கொண்டு, சுகமாக ஊரை வலம் வரவேண்டும் என்பது நம்மில் பலரது கனவு. அந்தக் கனவை நனவாக்க பல்வேறு நிறுவனங்கள் உதவுகின்றன.
இருப்பினும், ஆடம்பரமானக் கார் என்றால் அதில் அத்தனை வசதிகளும் இருக்கும். அப்படி அதிகவிலைகொண்ட சொகுசுக் காரை உற்பத்தி செய்வதில், டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது.
வீடியோ வைரல்
தற்போது டெஸ்லா நிறுவனத்தின் கார் ஒன்றை அதன் உரிமையாளர் வெடிவைத்து தகர்க்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தெற்கு பின்லாந்தின் கிம்மென்லாக்சோ என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ரூ.17 லட்சம் கட்டணம்
டூமாஸ் காட்டைனேன் என்பவர் தனக்கு சொந்தமான டெஸ்லா காரை கடந்த சில தினங்களுக்கு முன் பழுது பார்ப்பதற்காக ஒரு நிறுவனத்தில் ஒப்படைத்துள்ளார்.
அவர் காரை ஒப்படைத்த சில தினங்களில் அந்த நிறுவனத்தில் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அங்கு சென்று பார்த்த போது அவரது காரை பழுது பார்ப்பதற்கு ரூ .17 லட்சம் (இந்திய மதிப்பில் ) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது காரை 17 லட்சம் கொடுத்து சரிபார்ப்பதற்கு பதிலாக 30 கிலோ டைனமைட்டைப் பயன்படுத்தி வெடிக்க வைத்துள்ளார். அவர் அந்த கரை வெடிக்க செய்வதற்கு முன் பொம்மிஜட்காட் என்ற யூடியூப் சேனலின் உதவி மூலம் அந்த நிகழ்வை படம்பிடித்துள்ளார்.
வெடி வைத்துத் தகர்த்தல்
அதில் அவர் அந்த காரை மக்கள் கூட்டம் இல்லாத இடத்தில் வெடிக்க வைக்க தயாராகுகிறார். பின்னர் அவர் அந்த காருக்கு வெடிமருந்துகளை வைப்பதும் அதன் பிறகு அந்த கார் வெடித்து சிதறுவதும் படமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதன் உரிமையாளர் டூமாஸ் காட்டைனேன் கூறியதாவது :
நான் டெஸ்லாவை வாங்கியபோது, முதல் 1,500 கிமீ அது நன்றாக ஓடியது. பின்னர் அது சரியாக இயங்கவில்லை. எனவே எனது காரை பழுதுபார்க்கும் நிறுவனத்தில் ஒப்படைத்தேன். ஏறக்குறைய ஒரு மாதமாக கார் அங்கேயே இருந்தது, கடைசியாக எனது காருக்கு அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று எனக்கு அழைப்பு வந்தது.
முழு பேட்டரி செல்லையும் மாற்றுவதே ஒரே வழி என்றும் அதற்கு ரூ .17 லட்சம் செலவாகும் எனவும் தெரிவித்தனர். எனவே, நான் எனது காரை எடுத்துக்கொள்கிறேன் என அவர்களிடம் சொன்னேன். அதன் பிறகு இதை சரிசெய்யும் முடிவை விடுத்தது எனது காரை வெடிக்கவைக்க முடிவு செய்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த காரை அவர் வெடிக்கவைத்த வீடியோ இணையத்தில் பதிவு செய்யப்பட்ட சில மணிநேரங்களில் 2.23 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...