ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் இரு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். அவ்வகையில் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கிய ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டம் இன்று முடிவுற்றது. கொள்கை கூட்டத்தின் முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் வெளியிட்டுள்ளார். அதில், ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களை வாங்கியோருக்கு மாத EMI தொகை மேலும் உயரும்.
ரெப்போ வட்டி (Repo Interest)
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பணவீக்கம் குறைந்த நிலையில், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை உயர்த்தாது என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இத்துடன் கடைசியாக 0.25% வட்டி உயர்த்தப்படும் என சில நிபுணர்கள் கருதினர். இதற்கு ஏற்ப தற்போது ரெப்போ வட்டி 0.25% அதிகரிக்கப்பட்டு 6.5% ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ், “கடந்த மூன்று ஆண்டுகளில் எதிர்பாரா நிகழ்வுகளால் உலகம் முழுவதும் பணக் கொள்கை சோதனைக்குள்ளாகியுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார செயல்பாடுக்கும், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் இடையே கடுமையான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை 0.25% அதிகரித்து 6.5% ஆக உயர்த்துகிறது.
உலக பொருளாதார சூழல் கடந்த சில மாதங்களுக்கு முன் இருந்ததை போல இப்போது இல்லை. முக்கிய பொருளாதாரங்களில் வளர்ச்சி வாய்ப்புகள் முன்னேறியுள்ளன. பணவீக்கம் குறைந்திருந்தாலும், முக்கிய பொருளாதாரங்களில் இன்னும் இலக்குக்கு மேல் பணவீக்கம் இருக்கிறது.
2023-24ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பணவீக்கம் சராசரியாக 5.6% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023-24 நிதியாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.4% ஆக இருக்கும் எனவும் முதல் காலாண்டில் 7.8%, இரண்டாவது காலாண்டில் 6.2%, மூன்றாவது காலாண்டில் 6%, நான்காவது காலாண்டில் 5.8% என்ற அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2022-23 நிதியாண்டில் பணைவிக்கம் 6.5% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆண்டில் சராசரி மழைக்காலத்தில் சில்லறை பணவீக்கம் 5.3% ஆக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: வருகிறது உத்தரவாத பென்சன் திட்டம்!
முதியோர் உதவித்தொகையில் புதிய நடைமுறை: இனி இவர்களுக்கும் பணம் கிடைக்கும்!