புழக்கத்தில் உள்ள ₹ 2,000 நோட்டுகளில் 76 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்துள்ளது. மீதமுள்ள நோட்டுகளை செப்டம்பர்-30 க்குள் டெபாசிட் அல்லது மற்ற மதிப்புமிக்க நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
மே 19 அன்று, ரிசர்வ் வங்கி புழக்கத்தில் உள்ள ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. கடந்த சில ஆண்டுகளாகவே 2,000 நோட்டுகளை புதிதாக அச்சடிப்பதை நிறுத்தி இருந்தது ரிசர்வ் வங்கி. மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்தினை தவிர்க்கும் வகையில் காலக்கெடு அளவு, வங்கிகளில் அடிப்படை வசதி என சில ஏற்பாடுகளையும் மேற்கொள்ள அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டது ரிசர்வ் வங்கி.
அதன்படி பொது மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் கரன்சி நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்றிக்கொள்ள செப்டம்பர் 30 வரை கால அவகாசம் அளித்தது.
இந்நிலையில் வங்கிகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, மே 19-ஆம் தேதி முதல் ஜூன் 30, 2023 வரை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ₹2,000 நோட்டுகளின் மொத்த மதிப்பு ₹ 2.72 லட்சம் கோடி எனத் தெரியவந்துள்ளது. இதன் மூலம், மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்த ₹ 2,000 ரூபாய் நோட்டுகளில் 76 சதவீதம் திரும்பி வந்துவிட்டன.
இன்னும் ₹ 0.84 லட்சம் கோடி அளவிலான ₹ 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2,000 நோட்டினை டெபாசிட் செய்வதில் தான் ஆர்வம்:
புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ₹ 2,000 மதிப்பிலான மொத்த ரூபாய் நோட்டுகளில், 87 சதவீதம் டெபாசிட்களாகவும், மீதமுள்ள 13 சதவீதம் மற்ற மதிப்புள்ள வங்கி நோட்டுகளாகவும் மாற்றப்பட்டதாக முக்கிய வங்கிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
2,000 நோட்டுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி:
இதனிடையே 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் ரிசர்வ் வங்கியின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. ரஜ்னீஷ் பாஸ்கர் குப்தா தாக்கல் செய்த மனுவில், 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இல்லை என்றும், இது தொடர்பாக முடிவெடுக்க மத்திய அரசுக்கு தான் சரியான அதிகாரம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே 2000 நோட்டுகள் பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் புழக்கமில்லாத காரணத்தினால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட நிலை தற்போது இல்லை.
2000 நோட்டுகள் திரும்பப் பெற்ற நிலையில் அதனை ஈடு செய்யும் வகையில் புதிய நோட்டுகளை RBI வெளியிடுமா என்கிற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் காண்க:
ED கைதுக்கு எதிராக முதல் முறையாக தீர்ப்பு- செந்தில்பாலாஜி வழக்கில் திருப்பம்