தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றி தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. தகவல் அளிப்பவர்களின் ரகசிய தன்மை பராமரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தடை
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், தண்ணீர் பைகள்/ பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிப்பதும், சேமித்து வைப்பதும், விநியோகம் செய்வதும், உபயோகிப்பதும் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள் சட்டவிரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள் குறித்த தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கருத்து தெரிவிக்குமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
புகார் (Complaint)
புகார்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் களிடம் தெரிவிக்கலாம். அவர்களுடைய தொடர்பு விவரங்கள் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் புகார்களை மின்னஞ்சல் கடிதம் தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ் அப் (Whatsapp) மூலம் பதிவு செய்யலாம் புகார் அளிப்பவர்கள் தங்கள் பெயர் முகவரி மற்றும் தொலைபேசி எண் முதலியவற்றை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது உண்மைக்கு புறம்பான தகவல்களை கொடுப்பதை தடுக்க முடியும்.
தகவல் தெரிவிப்பவர்கள் இரகசியத்தன்மை கண்டிப்பாக பராமரிக்கப்படும் என்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
இனி நேரடி வகுப்புகள் தானாம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு!
தடுப்பூசி போட விருப்பம் இல்லையா? வீட்டிலேயே இருங்கள்: ஐகோர்ட் அதிரடி!