
ரயில் டிக்கெட் கட்டணம் வரும் ஏப்ரல் 15ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது. சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், டீசல் இன்ஜின்களில் இயங்கும் ரயில்களில் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளிடம் இனி அதிக கட்டணம் வசூலிக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த கூடுதல் கட்டணம் ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
உண்மையில், டீசல் இன்ஜின்களில் ஓடும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடம் ஹைட்ரோகார்பன் சர்சார்ஜ் (HCS) அல்லது டீசல் வரியை ரூ.10 முதல் ரூ.50 வரை விதிக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. டீசல் இன்ஜின்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட தூரம் இயக்கப்படும் ரயில்களுக்கு இந்தக் கூடுதல் கட்டணம் பொருந்தும். டீசல் விலை அதிரடியாக உயர்ந்து வருவதால் அதன் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் வகையில் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு உயர்வு?
இதன்படி,ரயில் பயணத்தில் ஏசி வகுப்புக்கு ரூ.50, ஸ்லீப்பர் வகுப்புக்கு ரூ.25, பொது வகுப்புக்கு ரூ.10 என மூன்று பிரிவுகளின் கீழ் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிகிறது.புறநகர் ரயில் பயண டிக்கெட்டுகளில் இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. இதற்காக நிர்ணயிக்கப்பட்ட தூரத்தில் 50 சதவீதம் டீசலில் இயங்கும் ரயில்களை அடையாளம் காணுமாறு அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அடிப்படைக் கட்டணத்தை உயர்த்தாமல் கூடுதல் கட்டணத்தைச் சேர்த்தும் சலுகைகளைக் குறைத்தும் வாடிக்கையாளர்களுக்கான சிரமங்களைக் குறைக்க ரயில்வே முயற்சிக்கிறது. ஆனாலும் டிக்கெட் விலை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
கோடை வெயிலைக் கொளுத்திவிட- தினமும் 4 புதினா இலைகள்!
லட்சம் ரூபாயை எட்டிய பஞ்சு விலை- ஜவுளித்துறை முடங்கும் அபாயம்!