தனியார் மருந்தியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் ஒருவர் தனது திருமணப் பத்திரிகையை மாத்திரை அட்டையின் பின்பக்கம் போன்று வடிவமைத்து அதில் தகவல்களை தந்துள்ளார். அவரது இந்த முயற்சி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
திருமண அழைப்பிதழ் (Wedding Invitation)
திருவண்ணாமலையில் தனியார் மருந்தியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுபவர் எழிலரசன். இவரது தந்தை மருந்தகம் வைத்துள்ளார். இவருக்கு செப்டம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதற்கான அழைப்பிதழை வித்தியாசமாக மாத்திரை அட்டைப் போன்று வடிவமைத்துள்ளார். மாத்திரை அட்டையின் பின்புறம் மருந்தின் பெயர், டோஸ் அளவு, தயாரிப்பு இடம், காலாவதி தேதி ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
அதனை மாற்றி மருந்தின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் எழில்வசந்தா-செப்-05 என தனது வருங்கால மனைவி பெயரைச் சேர்த்து திருமண நாளான செப்., 05ஐயும் இணைத்துவிட்டார். மாத்திரையின் மூலப்பொருட்கள் இருக்க வேண்டிய இடத்தில் திருமண ஜோடியின் பெயரும், அவர்களது கல்வி விவரங்கள், வேலைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். நீல நிற எழுத்தில் திருமண நாள், வரவேற்பு நாள் விவரங்களை தந்துள்ளார்.
மாத்திரை வடிவம் (Tablet Design)
மாத்திரையின் நிறங்கள் பற்றிய இடத்தில், லவ்லி ரெட் ஹார்ட் என குறிப்பிட்டுள்ளார். மாத்திரையின் தயாரிப்பு விவரங்கள் இருக்க வேண்டிய இடத்தில் திருமண ஜோடியின் பெற்றோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புதுமையான முயற்சி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சிலர் கிண்டலாக பக்கவிளைவு நிச்சயம் என கருத்து பதிவிட்டுள்ளனர்.
மேலும் படிக்க