ரேஷன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வாரத்தில் நல்ல முடிவெடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு ரேஷன் கடை ஊழியர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ரேஷன் கடை ஊழியர்கள் மூன்று நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விரைவில் முடிவு
இந்தப் போராட்டம் ஜூன் 7ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, மாற்று ஊழியர்களை வைத்து தடையின்றி ரேஷன் பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தது. வேலை இல்லை என்றால் சம்பளமும் இல்லை என்ற அடிப்படையில் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யவும் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ரேஷன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வாரத்துக்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப் படி உயர்வு கோரி பணியாளர்கள் சங்கம் ஒன்று 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. எனினும், பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் இடையூறு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அரசு உறுதி
நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப் படி உயர்வு குறித்து அரசு கனிவுடன் பரிசீலித்து வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் இதன் மீது நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
எனவே, நியாய விலைக் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் தங்களது கோரிக்கை குறித்து கவலைப்படாமல் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஓடிப்போன மனைவி-போலீஸில் புகார் அளித்த 2 கணவர்கள்!
விவசாயிகளுக்கு 60% மானியத்தில் மதிப்புக் கூட்டுப்பொருட்கள்!