நன்றியுள்ள ஜீவன் என நன்றிக்குப் பெயர்பெற்ற நாய்கள் எப்போதுமே தங்களது குணாதிசயங்களில் இருந்து விலகுவதில்லை. அப்படியொரு சம்பவம்தான் தற்போது நடந்திருக்கிறது. அதாவது விவசாயியான தன் எஜமானரைக் கடிக்க வந்த பாம்பை விரட்டி விரட்டிக் கொன்றுவிட்டு, தன் உயிரைக் கொடுத்து, எஜமானரைக் காப்பாற்றியிருக்கிறது வளர்ப்பு நாய்.
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா சுக்ரவார சந்தை பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத். விவசாயியான இவருக்கு, அதேபகுதியில் தோட்டம் உள்ளது. இந்த நிலையில் மஞ்சுநாத், தோட்டத்திற்கு சென்று வேலை செய்து கொண்டிருந்தார். உடன் தனது வளர்ப்பு நாயை அழைத்து சென்றுள்ளார்.
வளர்ப்பு நாய் தோட்டத்தில் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் தோட்டத்தில் நாகபாம்பு ஒன்று புகுந்து ஊர்ந்து சென்றுள்ளது. அந்த நாகப்பாம்பு, மஞ்சுநாத் நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.
ஆக்ரோஷச் சண்டை
இதை பார்த்த வளர்ப்பு நாய் தனது எஜமானை காப்பாற்ற நாகப்பாம்பைப் பார்த்து குரைத்து அதனை கடித்து குதறியது. இதற்கிடையே நாகபாம்பும், நாயை கடித்து பதம் பார்த்தது. இவ்வாறு சுமார் 25 நிமிடங்களும் நாகபாம்பும், நாயும் ஆக்ரோஷமாக சண்டையிட்டன. முடிவில் நாய், நாகப்பாம்பை கடித்து கொன்று துண்டு, துண்டாக்கியது. இதில் சோகத்தின் உச்சக்கட்டம் எதுவென்றால், பாம்பு இறந்த சில நிமிடங்களில் பாம்பு விஷம் ஏறி வளர்ப்பு நாயும் பரிதாபமாக உயிரிழந்த. வளர்ப்பு நாய் இறந்ததால் மஞ்சுநாத் கவலை அடைந்தார்.
வீடியோ வைரல்
மேலும் இந்த சம்பவத்தை மஞ்சுநாத் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
எஜமானரைக் காப்பாற்ற நாகப்பாம்புடன் சண்டையிட்டுக் கொன்று உயிர்விட்ட வளர்ப்பு நாய் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் படிக்க...
தடுப்பூசி போடாத நோயாளி-அறுவை சிகிச்சை செய்ய மறுத்த மருத்துவமனை!
குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் உதவித்தொகை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!